பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 25



தாழம்பூக் கழியின் புறத்துள்ள புலால் நாற்றத்தினை நீக்கித் தன் மணமே கழியிடமெல்லாம் கமழுமாறு செய்தது போலத், தலைவியின்பாலுள்ள என் காதல் நம் உறுதிமொழிகளை யெல்லாம் முற்றவும் நீக்கி, அக் காதலையே பெருக்குவதாயிரா நின்றது என்று, இறைச்சியிற் பொருள்பட, உள்ளவுரனோடுகிளந்து, கழற்றெதிர் மறுத்தானாகவும் கொள்க.

மேற்கோள்: பாங்கன் கழறத் தலைமகன் கழற்றெதிர் மறுத்ததற்கு இப்பாட்டினை நக்கீரனார் மேற்கோள் காட்டுவர் (இறையனார் களவியல் 3)

பாடபேதங்கள்: 3. குறுமுகை, 5. பெய்தல் தலைஇய 6. நெடுங்கோடு, 7. விரிய விரைஇ. 8. பொருதிழிந்த 10 கவர்பரி; கவர்காற். 12. திறக்கும்; துறந்த 15. புறக்கொடுத்த

131. யான் வாரேன்!

பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார். திணை: பாலை, துறை: பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. சிறப்பு: நடுகல் நட்டு வீரரைப் போற்றும் பழைய தமிழர்மரபு.

(பிறருக்கு ஈந்து புகழ்பெற விரும்பினான் ஒருவன் அதற்குப் பொருள்தேடி வரவும் அவன் நெஞ்சம் தூண்டியது. ஆனால், தலைவியைப் பிரியவும் அவனால் முடியவில்லை. தன் நெஞ்சிற்கு இவ்வாறு கூறிப் போகாதேயே அமைகின்றான்)

        ‘விசும்புற நிவந்த மாத்தாள் இதனைப்
        பசுங்கேழ் மெல்லிலை அருகுநெறித் தன்ன,
        வண்டுபடுபு இருளிய, தாழ்இருங் கூந்தல்
        சுரும்புஉண விரிந்த பெருந்தண் கோதை
        இவளினும் சிறந்தன்று, ஈதல் நமக்கு என, 5

        வீளை அம்பின் விழுத்தொடை மழவர்
        நாள்ஆ உய்த்த நாமவெஞ் சுரத்து
        நடைமெலிந்து ஒழிந்த சேட்படர் கன்றின்
        கடைமணி உகுநீர் துடைத்த ஆடவர்
        பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும், 10

        பிலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்
        வேல்ஊன்று பலகை வேற்றுமுனை கடுக்கும்
        வெருவரு தகுந கானம் ‘நம்மொடு
        வருக என்னுதி ஆயின்,
        வாரேன்; நெஞ்சம் வாய்க்கநின் வினையே. 15