பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

392

அகநானூறு - மணிமிடை பவளம்


கல்லாடனார் (171, 199, 209)

அகத்துள் ஏழும், குறுந்தொகையுள் இரண்டும், புறநானூற்றுள் ஐந்தும் ஆக இவர் பாடியவை 14 பாடல்கள். இவராற் பாடப்பெற்றோர் அம்பர் கிழான் அருவந்தை, முள்ளுர் மன்னன் காரி, ஒரி, அஃதை, பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், கள்வர்கோமான் புல்லி, களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் ஆகியோராவர். தொல்காப்பியத்துக்கு உரை செய்தவருள் இவரும் ஒருவர் என்பர். கல்லாட நூலை இயற்றியவரும், பதினோராம் திருமுறைப் பாடல்களைச் செய்தவரும், இவரினும் வேறான கல்லாடர்கள். கல்லாடம் என்பது பாண்டிநாட்டில் ஒரூர். அவ்வூர்ப் புலவர்கள் பலரும் கல்லாடர் எனப் பட்டிருத்தலும் கூடும். இந்நூலுள் வரும் மூன்று பாடல்களுள், 199 ஆவது பாடலிற் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் நன்னனை வென்ற செய்தியையும், 209ஆவது செய்யுளுள் தலையாலங்கானத்துப் போர்வென்ற நெடுஞ்செழியனின் வெற்றியையும்,ஓரியைக் கொன்று கொல்லியைச் சேரலர்க்குத் தந்த காரியின் செயலையும் இவர் கூறியுள்ளனர்.

கழார்க் கீரன் எயிற்றியார் (163, 217, 235, 298)

சோணாட்டுத் தஞ்சை மாவட்டத்துள்ள, ‘கழாஅர்' என்னும் ஊரைச் சேர்ந்தவர் இவர். (அது இப்பொழுது திருக்களார் என வழங்கும்.) பெண்பாற் புலவர்; வேட்டுவக் குடியினர். கீரன் என்பானின் மனைவியார் எனக் கொள்ளலாம். இவர் பாடியனவாக நற்றிணையுள் இரண்டும், குறுந்தொகையுள் மூன்றும், அகத்துள் ஐந்தும் காணப்படுவன, இவருடைய கணவர் படைத் தலைவர் என்பதும், அவர் சோழனின் துணையாகச் செல்ல, அவர் பிரிவினாலே இவர் உள்ளங் கலங்கிப் பாடிய பாடல்கள் பல என்பதும், அவற்றுள் சிலவே சங்க நூல்களுள் இடம்பெற்றன எனவும் கருதலாம். ‘வாடையே! இங்கு வந்தனையே! அங்கு அவர்பாலும் செல்லாயோ?' எனக் குமுறும் (163) நுட்பமான உளவியல் கூறுபாடுகளைக் காட்டுவன இவர் செய்யுட்கள்.

காவன் முல்லைப் பூதனார் (151, 241, 293)

காவல் முல்லைப் பூதரத்தனார் எனவும் குறிப்பிடப் பெற்றிருக்கின்றனர் இவர். இவர் இயற்பெயர் பூதனார் எனவும், காவன்முல்லை என்னும் துறைபற்றிய செய்யுட்களை இயற்றும் திறனுடைமை பற்றி இப்பெயர் உடையவராயினர் எனவும் கொள்ளலாம். இவர் பாடியனவாகக் குறுந்தொகையுள் இரண்டும், நற்றிணையுள் ஒன்றும், அகநானூற்றுள் ஐந்தும் ஆக