பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

394

அகநானூறு - மணிமிடை பவளம்


குவாயிற் கீரத்தனார் (129, 287)

குடவாயில் சோணாட்டுப் பேரூர்களுள் ஒன்று, தஞ்சை மாவட்டத்துக் கொரடாச்சேரிக்கு வடக்கே ஏழாவது கல்லில், இந்நாட் 'கொடைவாசல்' என வழங்குவதே இவ்வூர் என்பர்.இப் புலவர் பல குறுநிலத் தலைவர்களைப் பாடியுள்ளனர். கழுமலப் பெரும் போரும், சோழர் குடந்தைக்கண் வைத்த பெருநிதியமும் இவராற் குறிக்கப்படும். பெரும்பூட்சென்னி, பொறையன், நன்னன், எவ்வி, அத்தி, பழையன், புன்றுறை, வழுதி, கணையன், கட்டி முதலியோர் பற்றி இவர் பாடியுள்ளனர். ஆகவே, அவர்களைப் பாடிய பிற புலவர்களான நக்கீரர், பரணர், கபிலர், மாமூலர் போன்றார் காலத்தவர் இவர் எனக் கொள்ளுதல் பொருந்தும். இந்நூலுள், சுரத்திடையே பாழ்மன்றில் தங்கி இருக்கும் பிரிந்து செல்வோனான காதலன், ‘கணைக்கால் அம்பிணை சிறுபுறம் நக்க; நோக்க,' வரம்பு வந்து அலைக்கும் மாலை என நுட்பமான கருத்தினை அமைத்துள்ளனர் (287)

குமுழி ஞாழலார் நப்பசலையார் (150)

மாறோக்கத்து நப்பசலையார் என்னும் புலவரினும் வேறு படுத்த இப் புலவர்க்குக் குமுழி ஞாழலார் நப்பசலையார் என அடைமொழியிட்டுக் குறித்தனர் எனலாம். பெயரை நோக்கும் போது இவரையும் பெண்பாற் புலவர்களுள் ஒருவராகவே கொள்ளலாம். குமுழி-உருண்டை; ஞாழல்-கொன்றை; எனவே, பிரிவால் பெரிதாகக் கொன்றைப் பூப்போற் பொன்னிறமாகப் படந்த பசலை நோயினை உடையவர் இவர் எனவும் கூறலாம். இச் செய்யுளில், ‘யாமை மறைத்தீன்று புதைத்த முட்டையைப் பார்ப்பிடனாகும் அளவைக் கணவன் ஒம்பும் என்ற செய்தியைக் கூறியுள்ளனர். ‘வல்வாய் அரவச் சீறுர் காணப் பகல் வந்தன்றாற் பாய்பரி சிறந்தே' என்று தலைவன் வரைவுகுறித்துத் தேர் ஊர்ந்து வந்த செய்தியைச் சொல்லும் நுட்பமும் இனிமையுடையதாகும்.

கொடியூர் கிழார் மகனார் நெய்தற்றத்தனார் (253)

இவருடைய பெயர் தத்தனார் என்பதாகும். நெய்தல் திணைச் செய்யுட்களைச் சிறந்த முறையிலே பாடுதல் பற்றி இப்பெயர் பெற்றனர் எனலாம். வேளாண் மரபினர். கொடியூர் கிழார் என்பவர் இவருடைய தந்தையார் ஆவர். குடிக்கிழார் மகனார் எனவும் பாடம் கொள்வதுண்டு. இவர் பாடியவாகக் காணப்படுபவை அகம் 243, நற்றிணை 49, 130 ஆகிய செய்யுட்களாகும். பிரிவு நோய், 'விரிநீர் வையக வரையளவு இறந்த எவ்வநோய்’ என இவரால் நற்றிணை 130ஆவது செய்யுளுள் கூறப்பட்டது காண்க. இந்நூற் செய்யுளுள்,