பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

அகநானூறு - மணிமிடை பவளம்



வானமளாவ உயர்ந்த, கரிய அரையினையுடைய இதனை மரத்தின் பசிய நிறமுடைய மென்மையான இலைகள், ஒன்றனருகே ஒன்று ஒடித்து வைக்கப்பட்டாற்போல, வண்டு மொய்த்து இருண்ட முதுகின்புறத்தே தாழ்ந்த கரிய கூந்தலையும், சுரும்பினம் உண்ண விரிந்த பெரிய குளிர்ச்சியான மாலையினையுமுடைய இத் தலைவியினும், வறியார்க்கு ஈதலே நமக்குச் சிறந்ததென;

'விள்' என்னுஞ் சீழ்க்கை ஒலியினைக் கொண்ட, தப்பாத அம்புத் தொடையையுடைய வீரர், நாட்காலையிலே வெட்சி சூடினராய், ஆன் நிரையைக் கவர்ந்துகொண்டு போன, அச்சம் பொருந்திய வெம்மைகொண்ட பாலைநில வழியிடத்தே, தூரத்து நடையினாலே மெலிந்து தம் தாயுடன் செல்ல மாட்டாது தங்கிவிட்ட நினைவுத் துன்பத்தையுடைய கன்றுகளின் கடைக்கண்களினின்றும் ஒழுகும் நீரைத் துடைத்த கரந்தை வீரர்களது;

பெயரும் பெருமையும் எழுதி, மயிற்பீலி சூட்டிய, பாலைநில வழிதோறும் உயர்ந்து தோன்றுகின்ற நிலையான நடுகற்களிடத்து, அந் நடுகலிடத்தவன் பிடித்த வேலை நட்டு, அதன் கண் சார்த்தப்பெற்ற கேடகங்கள், வேற்று வேந்தரது போர் முனையைப் போலத் தோன்றாநின்ற, அச்சம் வருகின்ற கானத்தே;

நெஞ்சமே! நம்மொடு நீ வருக என்று அழைப்பையாயின்’ யான் வாரேன்; நீயே செல்வாயாக நின்காரியம் கைகூடுவதாக!

என்று, பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைவன் கூறினான் என்க.

சொற்பொருள்: 1. இதனை - ஒரு மரம், மாத்தாள் இதனை - கரிய அரையினையுடைய இதணை மரம், 3. வண்டு படுபு - வண்டு மொய்த்து. 6. வீளை அம்பு - விள்’ என்னும் சீழ்க்கை ஒலியோடு தொடுக்கப்படும் அம்பு 1. பிறங்கு நிலை - உயர்ந்து தோன்றுகின்ற நிலையான, 12. ‘வேல்'என்றது நடுகலிடத்தவன் கைக்கொண்டிருந்த வேலினை. 15. வாய்க்க வாய்ப்பதாக; காரியம் கைகூடுக

வண்டு மொய்த்து இருண்ட முதுகின் புறத்தே தாழ்ந்த கரிய கூந்தலுக்கு, ‘விசும்புற நிவந்த மாத்தாள் இதனை பசுங்கேழ் மெல்லிலை அருகு நெறித்தன்ன என்று உவமித்துக் காட்டுகின்றார். இதனாற் கூந்தலின் இயல்பான கருமையும் நெடுமையும், அதன்பால் சூட்டப்பட்டிருக்கும் தண்கோதையின் சிறப்பும் விளங்கும்.