பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 395


‘கண்ணில் வாடை' என வாடைக் காற்றையும், 'அனைத்தால் தோழி நம் தொல்வினைப் பயனே' என ஊழ்வினைப் பயன் உறுத்துவந்து ஊட்டுதல் பற்றிய கொள்கையினையும் கூறியுள்ளனர். இவருடைய கொடியூர் என்பது மதுரை மாவட்டத்து 'கொடி மங்கலமே' என்பார்கள்.

கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் (168)

இவன் சேரமன்னர்களுள் ஒருவன். சேரமான் கோட்டம் பலத்துத் துங்கிய மாக்கோதை எனவும் வழங்குவர். கோட்டம்பலம் என்னும் இடத்தே நடந்த போரிலே உயிர் துறந்தவன். ‘கோட்டம் பலம்' என்பது இந்நாளைய கோட்டாறு என்னும் குமரி மாவட்டத்துப் பேரூர் எனவும், இவன் சேரநாட்டின் அப்பகுதியை ஆண்டிருந்தவன் எனவும் கருதலாம். தொண்டிக்கு இறைவனாயிருந்து பொய்கையாரால் பாடப் பெற்ற சேரமான் கோக்கோதைமார்பன் வேறொருவன். இவன், தன் தலைவியின்பாற் பெரிதும் காதல் உடையவனாயிருந்தவன். புறநானூற்று 245 ஆவது பாடலுள் இவன் அவள் இறந்தபோது பாடியுள்ள செய்யுள் மிகவும் உருக்கம் உடைய தாகும். 'ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை, இன்னும் வாழ்வல் என்னிதன் பண்பே?' என, அவன் கதறியழுகிறான். இந்நூலினுள் வரும் செய்யுள், ‘பல்லான் குன்றிற் படுநிழல் சேர்ந்த நல்லான் பரப்பிற் குழுமூர் ஆங்கண், உதியன் கொடைக்கடன் ஏன்ற செய்தியைக் கூறுவதனால், இவன் உதியன் சேரலாதனின் காலத்தவனாகலாம். ‘கோதை’ என்பானின் தகப்பனாதலின், ‘மாக்கோதை’ எனப் பெயர் பெற்றனன் போலும்.

கோடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் (179, 282)

கொடி மங்கலத்து நற்சேந்தனார் எனவும் கூறப்பெறுவர்.’ காப்பியஞ்சேந்தனர், நற்சேந்தனார் ஆகியோரினும் வேறுபடுத்த இவ்வாறு அடைமொழியிட்டு வழங்கப் பெற்றனர். இவராற் பாடப்பெற்றன இவ்விரண்டு செய்யுட்களுமேயாகும். இந்தக் கொடிமங்கலம் மதுரை மாவட்டத்தது ஆகும். குறவர் மகளிர் குரவையாடுதலும், இளம்பெண்களை முருகு அணங்கிய தென வேலனை அழைத்து வெறியாட்டயர்ந்து வேண்டுதலும் இவராற் கூறப்பெற்றுள்ளன.

சாகலாசனார் (270)

அகநானூற்றுள் இதனையும், 16 ஆவது செய்யுளையும் இயற்றியவர் இவர் சேரநாட்டு ஊராகிய கழுமலத்தினைப் பற்றி இவர் குறிப்பிட்டுள்ளனர். அதிற் குறிப்பிட்டுள்ள நற்றேர்க் குட்வன் என்பான் யாவன் என்று அறிதற்கில்லை. இவர் பெயர், இவரோர் வடநாட்டவர் என்பதனையும் தமிழகத்துக்கு வந்து