பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

396

அகநானூறு - மணிமிடை பவளம்


சேர நாட்டுப் பகுதியில் தங்கித் தமிழ்ப்புலமை பெற்றவர் என்பதனையும் காட்டும் என்பர். இது ஆய்தற்கு உரியதாகும்.

செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார் (177)

இவர் பொன் வாணிகர் எனவும், செயலூர் என்னும் ஊரினர் எனவும்,கொற்றனார் இவருடைய இயற்பெயர் எனவும், சாத்தனாரின் மகன் எனவும், இவருடைய பெயரால் அறியலாம். ‘செயலூர்' என்பது கோசர்க்குரியதாயிருந்த செல்லுர் எனவும், வேறு எனவும் கூறுவர். இப்பாடல் ஒன்றே இவர் பெயராற் காணப்படுவது. செல்லூர் இளம் பொன் சாத்தன் கொற்றன், உறையூர் இளம்பொன் வாணிகன் சாத்தன் கொற்றன் எனவும் இப்பாடலைப் பாடியவர் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. இப் பாடலுள் 'அயிரியாற்று அடைகரை' என்பதும், பண்ணன் என்பானின் காவிரி வடகரையூரும் குறிப்பிட்டிருப்பக் காண்கின்றோம். ஆகவே, சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் காலத்தவர் இவர் எனலாம்.

செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார் (250)

செல்லுர் தமிழகத்துக் கீழைக்கடற்கரை ஊர்களுள் ஒன்று. கோசர்களுக்கு உரியது கொற்றனார் எனவும் இவர் பெயர் வழங்கும். பெரும்பூதனார் இவரின் தந்தையார். இச்செய்யுளில், “இறைவளை நெகிழ்ந்த நம்மோடு துறையுந் துஞ்சாது கங்குலானே’ எனக் காதலற் காணாது வருந்தும் மகளிர் உரைத்ததாகக் கூறும் பகுதி மிகுதியான சுவையுடையதாகும். நற்றிணையின் 30 ஆவது செய்யுளும், குறுந்தொகையுள் 218, 858 ஆவது செய்யுட்களும் இவர் செய்தன என்பர்.

சேரமான் இளங்குட்டுவன் (153)

இவன் பாடியதாகக் காணப்படுவது இச்செய்யுள் ஒன்றே யாகும். ‘குட்டுவன்’ என்ற சிறப்புப் பெயரால் இவன் குட்ட நாடு என்னுஞ் சேரநாட்டின் பகுதிக்குரிய அரச மரபினரைச் சார்ந்தவன் எனலாம். ‘குட்டுவன் தொண்டி அன்ன' என வருவது கொண்டு, இவன் தொண்டியில் இருந்தவன் ஆகலாம் எனக் கருத இடம் உண்டு. இச்செய்யுளுள் கோங்கின் புதுமலர் உதிர்ந்து விழுவது கைவிடு சுடர்போலத் தோன்றும் என்று நயமாகக் கூறியுள்ளார். பிற செய்திகள் ஏதும் அறிதற்கு இல்லை.

தாயங் கண்ணனார் (132, 159, 213, 237)

இவர் பெயர் எருக்காட்டுர்த் தாயங் கண்ணனார் எனவும் வழங்கப்பெறும். எருக்காட்டுர் என்பது தஞ்சை மாவட்டத்து