பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

398

அகநானூறு - மணிமிடை பவளம்


பாடிய நற்114 இல் கரையைப் 'பள்ளித்தொல் கரை’ என்று கூறிய சிறப்பால் இந்த அடைமொழி பெற்றனர் எனலும் பொருந்தும். இந்நூற் செய்யுளுள் (282) குறிஞ்சியின் வளமும், அக்காலத்து மகளிர் 'வல்லே வருக வரைந்த நாள்' என, நல்லிறை மெல்விரல் கூப்பி, இல்லுறை கடவுட்குப் பலிக்கடன் செலுத்தும் வழக்கமும் காணப்படும்.

நக்கண்ணையார் (25)

இவர் பெண் பாலார். பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார் எனவும், திண்பொற் கோழிக் காவிதிமகன் கண்ணனார். நக்கணன் எனவும் இதனைப் பாடியோர் பெயர் காணப்படும். உறையூர் வீரை வேண்மான் வெளியன் தித்தனது மகனான போர்வைக் கோப்பெருநற்கிள்ளியைக் காதலித்து, அவன் தந்தையோடு மனவேறுபாடு கொண்டு வேற்று நாடு செல்ல, அதனால் துயருற்று அழுது புலம்பியவர் (புறம் 83, 84) அழிசி என்பானது ஆர்க்காட்டையும் இவர் நற்றிணைப் பாடலுள் சிறப்பித்துப் பாடியுள்ளனர். இவர் பாடியவையாகக் காணப்படுவை நற்றிணையுள் இரண்டும், அகத்தில் ஒவ்வொன்றும், புறத்துள் மூன்றும் ஆக ஆறு செய்யுட்கள். இப் பாடலுள், ‘மழை பெரிது பெய்த காலத்துச் சிறு கோட்டுப் பெருங்குளத்தைக் காக்கும் காவலனைப்' போல, அன்னையின் காவலும் கடுமையாயிருக்கின்றதென இவர் சொல்வது மிக்க நயம் உடையதாகும்.

நக்கீரர் (126, 141, 205, 227, 249, 253, 290)

நக்கீரனார், கணக்காயனார் மகனார் நக்கீரனார், மதுரை நக்கீரனார் எனவெல்லாம் இவர் பெயர் காணப்படும். பத்துப்பாட்டுள், திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை என்னும் இருநூல்களும், அகத்துள் 17, குறுந்தொகையுள் 8, நற்றிணையும் 7, புறத்துள் 3, ஆக 35 செய்யுள்களும் இவர் பாடியவையாகக் கிடைத்தவை. இறையனார் களவியலுக்குச் சிறந்த உரை வகுத்து, அதன்மூலம் சங்ககால உரை நடைச் சிறப்பை நாம் காணச் செய்தவரும் இவரே. இவர் கபிலர் பரணர் ஆகியோர் காலத்தவர், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், கரிகாற்சோழன், இருங்கோ வேண்மான் மற்றும்பலர் இவராற் பாடப்பெற்றோராவர். இவர் வேறு; நக்கீரதேவநாயனார் வேறு. காதலரை ஊழ்வினை கூட்டும் என்பதைத், ‘தொன்றுபடு நட்பிற் செயிர்தீர் நெஞ்சமொடு, செறிந்தோர் போல’ எனக் (205) கூறியவர் இவர். இவர் பாடல்களுள் வரலாற்றுச் செய்திகள் மிகுதியாக விளங்கும்.