பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

414

அகநானூறு - மணிமிடை பவளம்


உதியஞ்சேரல் (468, 233)

இவனே சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் எனப் போற்றி உரைக்கப்பெறுவன். பாரதப் போரிலே பெருஞ்சோறு அளித்தமைபற்றி இப் புகழ் பெயர் அமைந்தது எனவும் தன் முன்னோர்களுக்காகப் பெருஞ்சோற்று அமலை அளித்தமைபற்றி அமைந்தது எனவும் ஆன்றோர் கூறுவார்கள். இவன் மக்கள் இருவர். ஒருவன் செங்குட்டுவனின் தந்தையான இமயவரம்பன்; மற்றவன் பல்யானைச் செல்கெழு குட்டுவன். இவன் மனைவியின் பெயர் நல்லினியார். அவர், வெளியத்து வேளிர் குலத்து நங்கையாவர். இவன், தன் நாட்டு எல்லையை விரிவுபடுத்திய செய்தியை மாமூலனார் அகம் 65இல் கூறுவர். கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான், இவன் தன் முன்னோர்க்குச் செய்த கொடைக்கடனைப் பற்றிக் கூறுவர். மகமூலனார், இவனுடைய இந்தச் சிறந்த செயலைத்

'துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை
முதியர்ப் பேணிய உதியஞ் சேரல்
பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை’

எனத் தமது 233ஆவது செய்யுளிற் கூறுவர்.


எருமை (243)/b>

இந்நாள் மைசூர்ப் பகுதிகளை அக்காலத்தே எருமை நாடெனவும், அதன் தலைவனை எருமையூரன் எனவும் வழங்கி வந்ததாகக் காண்கின்றோம். ‘நேரா வன்தோள் வடுகர் பெருமகன்’ என இவன் போற்றப் பெற்றவன். பாண்டியன் நெடுஞ்செழியனைத் தலையாலங்கானப் பெரும்போரிலே எதிர்த்து நின்று தோற்றோடியவருள் இவனும் ஒருவனாவான். இப் பாடலுள், நக்கீரர் பெருமான், இவன் ‘கன்றுடைப் பெருநிறை மன்றுநிறை தரூஉம் நேராவன் தோளினன்’ எனவும், வடுகர் பெருமகன் எனவும், இவன் நாட்டுள் அயிரியாறு என ஒன்று இருந்தது எனவும் குறித்துள்ளனர்.


எவ்வி (126, 226)

சோணாட்டுத் திருவீழிமிழலையும், திருநீடூரும் உள்ளடங்கிய பகுதிக்குத் தலைவனாயிருந்தவன் இவன். பல்வேல் எவ்வி, வாய்வாள் எவ்வி என இவனுடைய போர்வன்மை போற்றப் பெறும், குடவாயிற் கீரத்தனார், வெள்ளெருக்கிலையார் ஆகியோர் இவனைப் பாடியவர். அன்னி என்பவன் அழுந்துர்த் திதியனுடனே போரிடத் துணிந்தபோது, நன்மொழி கூறித் தடுக்க முயன்றவன் இவன்.