பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

418

அகநானூறு - மணிமிடை பவளம்


முயன்றபோது, கோவூர் கிழார் தலையிட்டுக் காத்த செய்தியைப் புறநானூற்றுள் காணலாம். இப்பாடலுள் இவன் முள்ளுர்: மன்னன் எனவும், கல்லாடனார் கூறுகின்றனர். இவனைக் கபிலர் மிகவும் சிறப்புறப் பாடியுள்ளனர். பாரிமகளிரை மணந்த மலையமானின் மக்களான, தேர்வண் மலையனும், மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணனும் இவனுடைய மக்களே என்பர்.

குட்டுவன் (212,288, 290)

‘குட்டுவன்’ என்ற சொல் சேரநாட்டுப் பகுதிகளுள் குட்ட நாட்டிற்குரிய சேரர் மரபினன் என வலியுறுத்தும், பரணர், 212 ஆவது செய்யுளிலே இக்குட்டுவன் கடலினை முற்றிப் பகைவரையழித்த செய்தியைக் குறிப்பதனால் இது கடற்பிறக் கோட்டியவனும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மகனுமாகிய சேரன் செங்குட்டுவனையே குறிப்பதுமாகலாம். சாகலாசனார் என்பவர் 270 ஆவது செய்யுளில், ‘கொய்சுவல் புரவிக் கைவண் கோமான் நல்தேர்க் குட்டுவன்’ எனப் போற்றுவதுடன், இவனுடைய கழுமலத்தையும் போற்றி உரைக்கின்றனர். வெண்கோட்டியானை விறற்போர்க் குட்டுவன்! என இவனையும், 'தெண்டிரைப் பரப்பின் தொண்டி முன்றுறை” என இவனுக்கு உரிய தொண்டி நகரையும் நக்கீரர் 290 ஆவது செய்யுளுள் குறிப்பிடுகின்றனர்.


குறும்பியன் (262)

இவனே அழுந்துர்த் திதியன் என்பவன்.அன்னிமிஞரிலியின் தந்தைக்குச் செய்த கொடுமையின் காரணமாகக் கோசர்களோடு ‘ போரிட்டு அவரை அழித்தவன். இந்த வெற்றியைப் பரணர் இந்தப் பாடலுள் குறிப்பிட்டுப் போற்றுகின்றனர். ‘குறும்பு’ என்பது மலைப்பகுதியிலே குறுங்காடு சூழ்ந்த பகுதி. இவன் நாட்டின்கண் அது மிகுதியாக இருந்தமையின் இப்படியும் அழைத்தனர் போலும் குறும்பு - சிற்றரண்.

கொடுமுடி (259)

குறும்பொறை என்னும் மலைக்குக் கீழ்பால் விளங்கிய ஆமூர் என்னும் நகரினைக் காத்துப் பேணிய குறுநிலத்தலைவன் இவனாவன். ஆமூர்க்கவுதமன் சாதேவனார் என்பவர் இவனுடைய ஆமூரின் வளத்தினைப் பற்றிக், ‘கொடுமுடி காக்கும் குரூஉக்கன் நெடுமதில் சேண்விளங்கு சிறப்பின் ஆமூர்’ என இப்பாடலுட் கூறுகின்றனர். கொங்கு நாட்டிலே ‘கொடு முடி’ என்றிருக்கும் ஊர்ப்பெயர் இவன் நினைவாக ஏற்பட்டது போலும். வானவனோடு (சேரன்) இவன் போரிட்ட செய்தி. இப்பாடலுள் கூறப்படுவதனால் அது பொருந்துவதுமாகலாம்.