பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

அகநானூறு - மணிமிடை பவளம்



தேமலோடு கூடிய எனது மாமை நிறமும், தளிர்போன்ற அழகும் கெடப், புதல்களிற் பூத்துப் பரவிய பீர்க்கின் செல்விமலர்போன்று, பசலைநிறம் பாய்ந்த நெற்றியை உடையேனாகிச் சந்தன குங்குமச் சேற்றால் வரிக்கும் அழகினைக் கொண்ட குளிர்ந்த கண் அழ, நோய் மிகுந்தவளாகிய, ஆதிமந்தியைப் போல, அறிவுகெட்டு மயக்கமுற்றேன்.

அவர் விரைய வருவாரென்று தெளிந்திருந்த என் மனமும் அடும் போராற்றலையுடைய பதினான்கு குடி வேளிர்கள் ஒருங்கே கூடிச்சேர்ந்து, தாக்கியழித்த, கெடாத மிக்க புகழையும் வானளாவிய பெரிய குடையினையுமுடைய கழுவுள் என்பானது காமூரைப் போலக் கலங்கா நின்றதே!

சொற்பொருள்: 1. திதலை - தேமல், மாமை - மாமை நிறம். ‘தளிர்' என்பது மாந்தளிரை. 2. எதிர் மலர் - செவ்வி மலர்; புதுப்பூக்கள். 4. மழைக் கண் - குளிர்ந்த கண், கலுழ அழ. 5. ஆதிமந்தி - கரிகால் வளவனின் மகள் இவள் அறிவு பிறிதாகியது, இவள் தன் காதலனாகிய ஆட்டன் அத்தியைக் காவிரி வெள்ளத்தில் இழந்த காலத்து.7. காய் கதிர் - எரிக்கின்ற சூரியன். திருகுதல் - முடுகுதல்; தாக்கி வருத்துதல். கால் கனைந்து - காற்று மிகுதியாகி.8. கூடு குவி வான்பூ-இதழ் குவிந்த வெள்ளிய பூக்கள் 9.கோடு கடைகழங்கு-சங்கினாற் கடையப்பட்ட கழங்கு யானைத்தந்தத்தாற் கடையப்பட்ட கழங்கும்.ஆம், அறை பாறை. 12. ஈரெழு வேளிர் - பதினான்கு வேளிர்கள்.

விளக்கம்: இருப்பைக் கூடுகுவி வான்பூ காய்கதிர் திருகலின் கனைந்து கால்கடுகி அறைமிசைத் தாவும் காடிறந்தனர் நம் காதலர்; அதனால் என் திதலை மாமைத் தளிர் வனப்பு அழுங்கப் பசலைபாய்ந்த நுதலேன் ஆகிக், கண்கலுழ நோய் கூர்ந்து, ஆதி மந்தியின் அறிவு பிறிதாகிப், பேதுற்றது; அவரைத் தெளிந்த என் நெஞ்சமும் ஈரெழு வேளிர் ஒருங்கியைந்து எறிந்த கழுவுளின் காமூர்போலக் கலங்கிற்று என்க. மாது, அசை,

பாடபேதங்கள்: 13, காமூர், 14 விளிந்தன்று.

136. ஒய்யென நாணினாள்!

பாடியவர்: விற்றுாற்று மூதெயினனார். திணை: மருதம். துறை: உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

(தலைவனோடு தலைவி ஊடுப் புலந்து இருந்தாள். அவன், அவளுடைய ஊடலைத் தணிவிக்கவும், கூடி மகிழவும் முயன்றான்.