பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

அகநானூறு - மணிமிடை பவளம்


        இகுளை கேட்டிசின் காதலம் தோழி!
        குவளை உண்கண் தெண்பனி மல்க,
        வறிதியான் வருந்திய செல்லற்கு அன்னை
        பிறிதொன்று கடுத்தனள் ஆகி-வேம்பின்
        வெறிகொள் பாசிலை நீலமொடு சூடி, 5

        உடலுநர்க் கடந்த கடல்அம் தானைத்,
        திருந்துஇலை நெடுவேல் தென்னவன் - பொதியில்
        அருஞ்சிமை இழிதரும் ஆர்த்துவரல் அருவியின்
        ததும்புசீர் இன்னியங் கறங்கக், கைதொழுது,
        உருகெழு சிறப்பின் முருகுமனைத் தரீஇக், 10

        கடம்பும் களிறும் பாடி, நுடங்குபு
        தோடுந் தொடலையும் கைக்கொண்டு, அல்கலும்
        தேடினர் ஆதல் நன்றோ?-நீடு
        நின்னொடு தெளித்த நன்மலை நாடன்
        குறிவரல் அரைநாட் குன்றத்து உச்சி, 15

        நெறிகெட வீழ்ந்த துன்னருங் கூர்இருள்,
        திருமணி உமிழ்ந்த நாகம் காந்தட்
        கொழுமடற் புதுப்பூ ஊதுந் தும்பி
        நன்னிறம் மருளும் அருவிடர்
        இன்னா நீள்இடை நினையும்என் நெஞ்சே. 20

காதற்றோழியே! கேட்பாயாக

குவளைபோன்ற மையுண்ட கண்ணில், தெளிந்த நீர் ஒழுக யான் வருந்தின துன்பத்தை நோக்கி அதனைப் போக்குதற்கு, அன்னை, தெய்வத்தான் வந்தது இவ்வேறுபாடென்று வேறாக ஐயுற்றதனால், வெறிநாற்றமுடைய வேம்பினது பசிய இலையை நீலோற்பல மலரோடும் சூடி, பகைத்தவரை வென்று கடந்த கடல்போன்ற சேனையையும், திருந்திய இலை முகத்து நெடிய வேலையுமுடைய பாண்டியனது பொதியில் மலையின், ஏறற்கரிய உச்சியினின்றும் இழியும், ஆரவாரித்து வருதல யுடைய அருவியைப்போல ஒலிக்கும் சீரையுடைய, இனிய வாத்தியங்கள் ஒலிக்க,

உட்குப்பொருந்திய சிறப்பினையுடைய முருகனைக் கையாற்றொழுது, மலையின்கண் வருவித்து, அவன் கடம்பையும் களிற்றையும் புகழ்ந்து பாடிப், பனந்தோடும் காந்தள்மாலையும் கைக்கொண்டு, இரவு முழுவதும் வறிதே அசைந்து ஆடினராதல் நன்றாகுமோ?