பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 43



குளிர்ந்த நறிய கிணற்றிலுள்ள நீரைக் குடித்துச் செங்கோல் அறுகினை அருந்துகின்ற, வெள்ளிய முதுகையும் திரிந்த கொம்பையுமுடைய இரலை மான், ஒழுகிய மணலின் ஒரு பக்கத்தே, பிடவு விரிகின்ற கொழுமையான நிழலிலே பிணையுடன் இன்பமுறத் தங்க,

செவ்வரக்குப் போலும் நிறத்தையும் வடிவழகையுமுடைய இந்திர கோபங்கள், பல ஒருசேரப்பரப்பப்பட்டவைகள் போலப் பரவி, நெடிய கரிய வழியில் நீருக்கு அணியாக விளங்க,

இக் காலத்திலும் நம் காதலர் வாராராயின், நல்ல நுதலையுடைய தோழியே அவர் நிலைதான் யாதாயிற்றோ? அவர் மீளுவேம் என்று கூறியது, தொகுதியுடைய மேகம் இடியைத் தன்பாலே அமைத்துக் கொண்ட கார்காலம் அன்று: பின்னொரு காலமே போலும்! என்று, பிரிவிடை மெலிந்த தலைமகள் தோழிக்குச் சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. துஞ்சுவது போல - சாக்காட்டைப் போல. பக - பிளக்க, 2. உறை கொண்டு - நீரைக் கொண்டு. 3. பாடு சிறந்து உரைஇ - ஒலிமிகுத்துப் புடைபெயர்ந்து உலவி. 4. உட்க திடுக்கிடும்படி, 6. வாலா - தூய்மையல்லாத. 9. படுநீர் - கிணற்றிலுள்ள நீர் 12 ஏமுற-இன்பமுற15.நீரணி திகழ நீருக்கு அணியாக விளங்க 18. கருவி - தொகுதியையுடைய.

மேற்கோள்: ‘கொல்லே யையம் என்று சூத்திர மேற்கோளாக, ‘யாது கொல் மற்றவர் நிலையே’ என்பதனைக் காட்டி, இப்பாட்டினை இத்துறைக்கேஉதாரணமாகக் கொண்டு, ‘இம் மணிமிடை பவளத்துப் பாலைக்கண் முன் பனியும் வைகறையும் ஒருங்கு வந்தன என்றும்,

“வேந்துறு தொழிலே யாண்டின தகமே என்னுஞ் சூத்திரத்து, “கருவிக் காரிடி யிர்யிய, பருவ மன்றவர் வருது மென்றதுவே என்றது, கார்குறித்து வருவலென்றலின், அறுதிங்கள் இடையிட்டது என்றும் நச்சினார்க்கினியர் கூறுவர்.

பாடபேதங்கள்: 6 ஈன்றுவரலுழந்த 8. புதலேரணிந்த 12. துணையோ டமர் துயில் 18. இரீஇய பருவ மன்னவர். -

140. உமணர் மடமகள்!

பாடியவர்: அம்முவனார். திணை: நெய்தல், துறை: இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு உரைத்தது.