பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 63


        பெரிதால் அம்ம இவட்கே, அதனால்
        மாலை வருதல் வேண்டும்-சோலை
        முளைமேய் பெருங்களிறு வழங்கும்,
        மலைமுதல் அடுக்கத்த சிறுகல் ஆறே.

திரண்ட பனைமரத்தைப் போலப் பருத்த அழகிய வளைந்த துதிக்கையினையும், பகையைக் கொல்லுஞ் சினம் நீங்காத மன எழுச்சியினையும், வண்டுகள் மொய்க்கும் மதநீர் ஒழுக்கத் தினையும் உடையது, ஏந்தியிருக்கும் கொம்புகளையுடைய களிறு ஒன்று. அது, தண்ணென்ற மணம் iசும்மலைச்சாரலிலேயுள்ள மரங்களை முறித்துத் தள்ளிக் கொண்டே, தன்னுடன் மாறுபட்டு எதிர்த்த புலியுங் கதறுமாறு, அதனைத் தன் கோட்டால் குத்திக்கொன்று, அதனுடைய ஆற்றலையும் அழித்து விட்டதாகச், சிறுதினைகளையுடைய பெரிய புனங்களிலே நுழைந்து, தினைக் கதிர்களைக் கவர்ந்து உண்ணும். அத்தகையை நாட்டிற்குரிய தலைவனே!

கடும் விரைவுடனே செல்லும் குதிரையினை உடையவன் ஆய் எயினன். அவன், நெடுந்தேரினையுடைய மிஞ்சிலி என்பவனோடு போரிட்டுக் களத்திலே பட்டு வீழ்ந்தான். புட்களின் காவலனான அவனைக் காண எல்லாப் பறவைகளுமே சென்றன. காணச்செல்லாத கூகையானது தன் செயலுக்கு நாணிக் கடும் பகல் வேளைகளிலே சஞ்சரிக்காதாயிற்று. அந்தக் கூகையைப் போலவே, இவட்கும் பகற்போதிலே வெளியே வருவதற்கு இயலாதவாறு, அலர் எழலால் ஆகிய துன்பம் மிகுதியாயிற்று.

அதனால், சோலைகளிடத்தேயுள்ள மூங்கிலின் முளைகளை மேய்கின்ற பெருங்களிறுகள் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்ற மலைச்சாரலிடத்தேயுள்ள, கற்பாறைகள் செறிந்த பாதை வழியாக, இனி, மாலைநேரத்திலேயே நீயும் வருவாயாக!

என்று, தோழி தலைமகனைப் பகற்குறி மறுத்து இரவுக்குறி நேர்ந்த வாய்ப்பாட்டால், அதுவும் மறுத்து, வரைவுகடாயினாள் என்க.

சொற்பொருள்: 1. பனைத்திரள், திரள்பனை - திரட்சியுடைய பனைமரம், எறுழ்-வலிய.2.கொலைச்சினம்-கொல்லுந் தகைமையுடைய கடுஞ்சினம். 3. உயர் மருப்பு - ஏந்தியிருக்கும் கொம்பு. 5. உரற கதற, கடிந்து அழித்து. 6. வவ்வும் கவர்ந்து தின்னும். 7. கடும்பரி - கடுவேகத்துடன் செல்லும், 9. காணிய செல்லாக் கூகை - கூகை பகலிலே வெளி வராதது ஆதலின், அதனை இப்படி உவமித்துக் கூறினார்.