பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அகநானூறு - மணிமிடை பவளம்


அகத்தினின்று எழுகின்ற இன்பியல் வாழ்வின் ஆர்வத் துடிதுடிப்புகைைளயும் அளவற்ற எண்ணச் சுழல்களையும் அணிபெறக் காட்டுவனவே தமிழரின் அக நூல்கள். அவற்றுள், கடைச்சங்க காலத்துத் தொகுக்கப் பெற்றது அகநானூறு. ‘நெடுந்தொகை எனவும் அது பெயர்பெறும. அதனுள் (121 முதல் 300 வரை) நூற்றெண்பது செய்யுட்களைக் கொண்ட இரண்டாம் பகுதி இம் மணிமிடை பவளம் ஆகும்.

அகநானூற்றை அழகுற முதற்கண் ஆய்ந்து பதிப்பித்த சான்றோர் கம்பர் விலாசம் இராஜகோபால அய்யங்கார் அவர்களாவர்; பரிசோதித்தோர் மகாவித்துவான் ரா. ராகவய்யங்கார் அவர்களாவர். அடுத்து, உரையொன்றினை நூல் முழுமைக்குமே வகுத்த பெரியார் கரந்தைக் கவியரசு ரா. வேங்கடாசலம் பிள்ளையவர்கள். அது நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்கள் துணையுடன் வெளிவந்தது. சைவசித்தாந்த மகா சமாசத்தார் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையவர்கள் துணையுடன் சங்க இலக்கியங்கள் அனைத்தையுமே புலவர் வரிசையிலே வெளியிட்டனர். அண்மையில் மர்ரே கம்பெனியார் அக நானூற்று மூலத்தை மட்டும் நன்கு ஆராய்ந்து வெளியிட்டனர். இவர்களனைவரும் செய்த பெரும்பணியினாலேயே அகநானூற்றை அறிந்தறிந்து அனுபவிக்கும் பெருவாய்ப்புத் தமிழ் அன்பர்களுக்கு நெடுகிலும் வாய்த்தது.

எனினும், பலரும் எளிதிலே கற்று இன்புற வேண்டுமானால் எளிய உரை ஒன்றும் இன்றியமையாதது எனக் கருதி, அந்தத் தேவையை நிறைவுசெய்ய முயல்வதே இந்நூலின் நோக்கமாகும். பல்லாயிரவரும் பயனடைய வேண்டும் என்ற காரணம்பற்றி, மக்கள் பதிப்பு வரிசையிலே இதனை முதற்கண் வெளியிட முன்வந்தனர்.