பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 71


தீர்ந்துபோகும் பொருட்டாக வந்து நம்மைக் கூடிய பின்னர், குன்றிடத்து உள்ளதாகிய அருகிலிருக்கும் தன் சிற்றுாராகிய அவ்விடத்திற்குச் செல்வதற்காகப் போகின்றவளான நம்முடைய தலைவியின், வளைந்து கடை சுருண்ட கூந்தல், அந்த நன்னனுக்கு உரிய எழில் என்னும் நீண்ட மலைத்தொடர்களிலே யுள்ள பாழி என்னும் சிலம்பிலே யிருக்கும், களிகொண்ட மயிலின் தோகையைப் போன்றிருக்கும்!

வலிய வில்லினையுடைய வீரர்களான வேடர்களின் தலைவன் நள்ளி எனபவன். அவனுக்கு உரிய சோலைகள் மிகுந்த மலைச்சாரலிலே, கடவுளுக்குரிய வண்டு உண்ணலால் விரிந்த காந்தட் பூவினுள்ளும், வியப்புமிக்க அழகிய மலர்கள் பலவுமாக ஒருங்குகூடி நன்மணம் கமழ்வது போன்ற நறு நாற்றத்தினையுடையது அவளது திருமேனி!

பாடுதலிலே வல்லவராயினும் சரி, வல்லமையற்றவராயினும் சரி, பரிசில் பெறுவதை விரும்பிச் சென்றவர்களுக்கு மிடாவிலுள்ள சோற்றினை அவர்களுடைய மண்டையின் பெரிய பள்ளமானது நிறையும்படியாக அளிப்பவன், பெரிய யானைகள் நிறைந்த காட்டினையுடைய ஆண் என்பவன். அவனுடைய காட்டிடத்தேயுள்ள தலையாற்றினிடத்தே நிலை பெற்ற, மிகவுயர்ந்த மலையிடத்துள்ள மூங்கிலிற் பொருந்திய கணுக்களின் இடைப்பட்ட பகுதியைப் போல விளங்கிச், சேய்மைக்கண் உள்ளதேயானாலும் நாம் நடுங்கத்தக்க துயரினைத் தருவன அவளுடைய தோள்கள்!” என்று, இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொன்னான் என்க.

சொற்பொருள்: படர் - துன்பம், 3. செலீஇய பெயர்வோள் - செல்வதற்காகப் பெயர்கின்றவள். 4. அகவுநர். பாணர்கள். 5. தித்தன் வெளியன் - தித்தனும், வெளியனும்; இவரன்று ஒருவரே என்பவரும் உளர். 7. தனம் - செல்வம், பொன். 8. இறவு - இறவு என்னும் மீன். 9.மொய்ம் மூசு-வலிமைமிக்க. 15.பெருமகன் - பெருமான். 17. கடவுள் காந்தள் - கடவுள் சூடுதற்குரிய காந்தள் மலர். 18, இறும்பூது களுலிய ஆய்மலர் - செருக்கு மிகுந்த குறிப்பிட்ட சில நறும்பூக்களும் ஆம். 20. சால்பெரிய பானை, வாய் அகன்ற பானையுமாம், 22 தலையாற்று ஆற்றின் பிறப்பிடத்து தலையாறு என்னும் ஊரினும் ஆம் ஆய்க்கு உரியது பொதியம்; ஆகவே, தாமிரவருணியின் தலையாற்றுப் பகுதியான அடர்ந்த சாரல்களிலே எனவும் கொள்க. பிறங்கல் - மலையிடம்.