பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

அகநானூறு - மணிமிடை பவளம்



மேற்கோள்: இப்பாட்டினைத் திருமகட் புணர்ந்தவன் சேறற்கு உதாரணமாகக் காட்டுவர் அகப்பொருள் விளக்க உரைகாரர் (சூ158).

பாடபேதங்கள்: 1. நடுக் கரும்படர். 2. குன்றுறை நண். 6. இலங்கு நீர் 7 கனந்தரு 10. முனைமுரணுடைப்ப.

153. நோதகும் உள்ளம் நோக!

பாடியவர்: சேரமான் இளங்குட்டுவன். திணை: பாலை” துறை: மகட்போக்கிய செவிலித்தாய் கூறியது.

(மகள், தன் காதலனுடன் உடன்போக்கிலே சென்று விட்டதறிந்த தாய் துடித்துப் புலம்புகிறாள். தன் நோகின்ற நெஞ்சிற்கு அவள் இப்படிக் கூறுகிறாள்.)

        நோகோ யானே; நோதகும் உள்ளம்:
        அம்திங் கிளவி ஆயமொடு கெழீஇப்.
        பந்துவழிப் படர்குவள் ஆயினும், நொந்துநனி
        வெம்புமன், அளியள் தானே-இனியே,
        வன்க ணாளன் மார்புஉற வளைஇ, 5

        இன்சொற் பிணிப்ப நம்பி, நம்கண்
        உறுதரு விழுமம் உள்ளாள், ஒய்யெனத்
        தெறுகதிர் உலைஇய வேனின் வெங்காட்டு,
        உறுவளி ஒலிகழைக் கண்ணுறுபு தீண்டலின்,
        பொறிபிதிர்பு எடுத்த பொங்கெழு கூர் எரிப் 10

        பைதறு சிமையப் பயம்நீங்கு ஆர்இடை
        நல் அடிக்கு அமைந்த அல்ல; மெல்லியல்
        வல்லுநள் கொல்லோ தானே-எல்லி
        ஓங்குவரை அடுக்கத்து உயர்ந்த சென்னி
        மீனொடு பொலிந்த வானின் தோன்றித் 15

        தேம்பாய்ந்து ஆர்க்குந் தெரியினர்க் கோங்கின்
        காலுறக் கழன்ற கள்கமழ் புதுமலர்
        கைவிடு சுடரின் தோன்றும்
        மைபடு மாமலை விலங்கிய சுரனே?

அழகிய இனிய சொற்களையுடைய தன் ஆயத்தாருடனே கூடிப் பந்தாடலிலே ஈடுபட்டு வருவாளாயினும், இரங்கத் தக்கவளாகிய என் மகள், அதற்கே மிகவும் நொந்து வெதும்பி வாடுகின்றவள். அதுவும் கழிந்தது!