பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 73



உயர்ந்த மலைச்சாரலிலே, வண்டுகள் பாய்ந்து ஆர்ப்பொலி செய்யும் விளக்கமுடைய கொத்துக்களையுடைய கோங்கின் உயர்ந்த உச்சியிலே, இரவு நேரத்திலே, மீனோடு அழகுற்று விளங்கும் வானத்தைப்போலத் தோன்றிக் காற்று மோதத், தாம் கழன்று வீழ்ந்து வீழுமிடமெங்கும் மணங்கமழச்செய்து கொண்டிருக்கும் புதிய மலர்கள், கையினால் தூண்டத் தெரிக்கும் சுடர்ப்பொறிகள் போலத் தோன்றுகின்ற, மேகம் தவழும் பெரிய மலைமுகடுகள் குறுக்கிட்ட சுரநெறியிலே,

வேனிற்காலத்தில் காய்கின்ற கதிரானது கெடுத்த வெம்மைமிகுந்த காட்டிலே, வீசுகின்ற காற்றானது தழைத்த மூங்கிற் கணுக்கள் ஒன்றுடன் ஒன்று உராயத் தாக்குதலினால் எழுந்த, பொங்குதலையுடைய பொறி சிதறி எழுகின்ற மிகுந்த நெருப்பினால், பசுமையற்ற மலையுச்சிகளின் வளமெல்லாம் நீங்கிப் போனதும், நல்ல பாதங்கள் நடந்து செல்வதற்கு ஏற்புடையது அல்லாததுமாகிய அரிய வழிகளை, மென்மையான இயல்பினையுடைய அவள், வன்கண்மையினை உடையவனான அவள் காதலன் அவளை மார்புறத் தழுவியவனாக, கழுத்தை வளைத்து அவள் காதோடு சொல்லிய இனிய சொல்லினாலே அவள் உள்ளத்தைப் பிணித்துவிட, அதனை நம்பி, நம்மிடத்தே நேர்கின்றதான பெருந்துன்பத் தினையும் நினையாதவளாகி, இப்பொழுது, விரையச் செல்லுகின்றதற்கும் வல்லவள் ஆவாளோ?

இப்படி நினைந்து நினைந்து வருந்துகின்ற உள்ளத்துடனே யான் தான் நோகின்றேன் (என் செய்வேன்?)

என்று, மக்கட் போக்கிய செவிலித்தாய் சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. நோகோ யானே - யானே நோகின்றேன். 3. பந்து வழிப் படர்தல் - பந்தாடலின் பொருட்டுச் செல்லல் 4 வெம்பும்மன் - வாடுவள். 7 விழுமம் துன்பம். 10. பொங்கெழு கூர்எரி - பொங்கி எழுகின்ற பெருநெருப்பு:13, எல்லி - இரவு 17. கால் - காற்று.

உள்ளுறை: காற்றுவீச இணரினின்றும் கழன்று வீழ்ந்த புதுமலர் சுடர்போல் ஒளிவிட்டாற்போல, “நாணினும் கற்புச் சிறந்தன்று’ என்று, தனது பிறந்த வீட்டினை நீங்கித் தலைமகனுடன் சென்ற த்லைமகனின் செயல் புகழற்குரிய கற்பொழுக்க மாயிற்று என்று செவிலி தேறினாள் என்க.

பாடபேதங்கள்: 17. தண்கமழ் புதுமலர், கள்கமழ் பனி மலர்.