பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

அகநானூறு - மணிமிடை பவளம்



154. விரைந்து சேர்வோம்!

பாடியவர்: பொதும்பிற் புல்லாளங் கண்ணியார். திணை: முல்லை. துறை: வினைமுற்றிய தலைமகன் தேர்ப்பாக்ற்குச் சொல்லியது.

(தலைவியைப் பிரிந்து வினைமேற் சென்றிருந்தான் ஒரு தலைவன். வினையும் முடிந்தது. அவன் திரும்பவேண்டிய கார் காலமும் வந்துவிட்டது. அதனால், தன் பாகனை விளித்துக் கார்ப்பருவத்தின் வருகையைக் கூறித் தேரை விரைவாகச் செலுத்தச் சொல்லுகின்றான்)

        படுமழை பொழிந்த பயமிகு புறவின்
        நெடுநீர் அவல பகுவாய்த் தேரை
        சிறுபல் இயத்தின் நெடுநெறிக் கறங்கக்
        குறும்புதற் பிடவின் நெடுங்கால் அலரி
        செந்நில மருங்கின் நுண்அயிர் வரிப்ப, 5

        வெஞ்சின அரவின் பைஅணந் தன்ன
        தண்கமழ் கோடல் தாதுபிணி அவிழத்,
        திரிமருப்பு இரலை தெள்அறல் பருகிக்
        காமர் துணையொடு ஏமுற வதியக்,
        காடுகவின் பெற்ற தண்பதப் பெருவழி 10

        ஒடுபரி மெலியாக் கொய்சுவற் புரவித்
        தாள்தாழ் தார்மணி தயங்குபு இயம்ப
        ஊர்மதி-வலவ! தேரே-சீர்மிகுபு
        நம்வயிற் புரிந்த கொள்கை
        அம்மா அரிவையைத் துன்னுகம், விரைந்தே. 15

மிகுதியான மழை பொழிந்ததனாலே விளைவுப் பயன் மிகுகின்ற புறவிலேயுள்ள நீண்ட பள்ளங்களெல்லாம் நீர் நிறைந்தன. நீர்நிறைந்துள்ள பள்ளங்களிலே, திறந்த வாயினையுடைய தேரைகள் சிறிய பலவாகிய வாத்தியங்கள் ஒலிப்பது போல, நெடிய பாதைகள்தோறும்அப்படி ஒலித்துக் கொண்டிருக்கும். குறுகிய புதலாக விளங்கும் பிடவிலே நெடிய காம்புகளையுடைய பூக்கள் விளங்கும். அவை சிவந்த நிலத்திடையேயுள்ள நுண்மையான அயிரிடத்தே உதிர்ந்து அழகு செய்திருக்கும். வெம்மையான சினத்தையுடைய அரவின்படம் மேல்நோக்கி விளங்குவதுபோலக் கோடலின் அரும்புகள் தம் பிணிப்பவிழ்ந்து மலர்ந்திருக்கும். முறுக்குண்ட கொம்பினையுடைய ஆண்மானானது, தெளிந்து ஒடும் அறலினைப் பருகித்தன் அழகிய பெண்மானுடன் கூடி