பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 77


பூசிய முழவின் கண்ணிடத்திலே விரல்களை ஊன்றியதனால் ஏற்பட்ட வடுவினைப்போலத் தோன்றும், மரல்களும் வாடிக் கிடக்கும் அத்தகைய மலைப்பகுதியைக் கடந்து, பொருள் தேடச் சென்றிருப்பவர் அவர்.

அவருடைய பிரிவினாலே நாம் நோயுற்று மிகவும் வருந்துகின்றோம். ஆயினும், அவர், தாம் மேற்கொண்ட செய்வினையை..வெற்றியுடன் முடிப்பாராக! என்று, தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. அறன் கடைப் படாஅ வாழ்க்கை அறநெறியானது கடைப்பட்டுப் போகாத அறத்தொடுபட்ட இல்வாழ்க்கை. 5. நோய் நாம் உழக்குவம் - நாம் பிரிவினாலாகிய நோயினாலே கிடந்து துன்புறுவோம். 7. பயநிரை - பாற்பசுக்களின் நிரை. பாணாட்டு - பாணனது நாட்டு. 8. நெடுவிளி - நெடிதாக மாடுகளை விளித்துக் கூப்பிடுகின்ற சீழ்க்கை ஒலி. கூவல் - கிணறு.9.பத்தல் - நீர் முகக்கும் ஒலையால் முடையப்பட்டவளைந்த வாயினையுடைய பட்டை1.இரும்புலி - பெரிய புலி. 12. செதும்பு - சேறு. 15. மத்தளத்திலே, தோலின் நடுப்பகுதியிலே ஒலி ஒழுங்குக்காக வைக்கும் கண்ணிடத்தே நகத்தை வைத்து அழுத்தியது போல விளங்கும்.

உள்ளுறை: “யானைத்தடமீது புலித்தடம் பதிந்த காட்சி வழியிடைச் செல்பவர்க்கு, முழவுக் கண்ணிடத்து நகவடுப் போலக் களிப்பூட்டியது போல, அவரைப் பிரிந்ததால் வேறு பட்ட நம்மேனியின் தோற்றம் அலர் உரைப்பார்க்கெல்லாம் கூறி மகிழும்விருந்தாக அமைந்துவிட்டதே" என வருந்தினள்.

விளக்கம்: நீர் கொதிக்கும் நெடுவழி, யானைகளை யுடையதும் பெரும் புலிகளையுடைதுமான மலைவழி, மரலும் வாடிக்கிடக்கும் பாலை வழி என வழியின் கடுமையைக் கூட்டிக்கருதுக. “நாம் நோயுற்று வருந்துதலால், தலைவரின் முயற்சி பழுதுபடுமோ எனக் கலங்கியவள், நாம் நோயுற்றாலும் அவர் தம் செய்வினை முடிக்க!" என வாழ்த்தினாள்.

இச் செய்யுளுள் ‘அறன் கடைப்படாஅ வாழ்க்கையும், என்றும் பிறன் கடைச் செலாச் செல்வமும் பொருளுடையை யாலேயே அமையும்’ என்ற நீதி தெளிவாக உரைக்கப் பட்டுள்ளது.

பாடபேதங்கள்: 5.நாள் உழக்குவம்-நாள்தோறும் வருந்துவோம். 7. பாழ்நாட்டு ஆங்கண் பாழ்பட்டநாடாகிய அவ்விடத்தே