பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 89


தொகுபோர்ச் சோழன் பொருள்மலி பாக்கத்து

வழங்கல் ஆனாப் பெருந்துறை
20

முழங்குஇரு முந்நீர்த் திரையினும் பலவே!

நெஞ்சமே! மலைகளை உடையதாக விளங்குவது இவ்வுலகம். இதன்கண், நாடெல்லாம் மிகுதியாகப் புகழ்ந்து கூறுகின்ற, வீரஞ்செறிந்த தானையினையுடைய அரசர்கள் சிலராவர். அவருள்ளும்,அறத்தினையே வழுவாது மேற்கொண்ட செங்கோன்மையினை உடையவர் பாண்டியர். அவருள், பகைவருடன் நிகழ்த்திய போரின்கண்ணே, அவரது தறுகண்மையை அழித்து, அதனால் பூரித்த திண்மையான தோள்களை உடையவன், பலரும் புகழ்ந்து போற்றும் திருவினையுடையோனாகிய பசும்பூட் பாண்டியன் ஆவன். அவனுக்கு உரியது, தெய்வத்தையுடைய உயர்ந்த நிலைபேற்றினையுடையதான பொதியமலை யாகும்.

அப் பொதியிலின் பக்கமலைக் கண்ணே விளங்கும், கிளைத்த ஒளியுடைய காந்தட் பூக்களைப்போல மணம் கமழும் நல்ல நெற்றியினையும், அதனோடொத்த நீண்ட கூந்தலையும், மாமை நிறத்தினையும் உடையவள் நம் தலைவி. அவளது, நுண்மையான கோற்றொழிலினையுடைய விளங்கும் வளைகள், நம்முடைய வளமைபொருந்திய முதுகினைச் சுற்றிக் கொள்ளுமாறு அவளை அணைத்து இன்புறல் என்பது நமக்குக் கிட்டா தாயினும்

பகைவரது நாடுகள் பாழ்பட்டுப் போகுமாறு அழித்து வெற்றிகொள்ளுபவனும், பகைவரால் நெருங்குதற்கும் அரிதான வலிமையினையுடையவனும், வெற்றிவேலினை உடையோனுமான, சேரனுக்கு உரிய, அகன்ற இருள்கொண்ட காட்டினையுடைய கொல்லிமலையினைப்போல, எஞ்ஞான்றும் அவள் பால் வேட்கை கொண்டிருக்கும் எம் நெஞ்சத்திற்கு ஒர் உசாத்துணையாக, அவளது நட்பேனும் இனி நிலைபெறுவதாக!

பகைவர் விண்ணுலகினைப் பெறுமாறு போக்கிய, திண்மையான பிடியினைக்கொண்ட ஒளிபொருந்திய வாளினை உடையவன் ஈன்ற அணிமையினையுடைய பசுக்களைக் கவர்ந்து வரும் வீரர்களுக்குத் தலைவனாக விளங்குபவன், திரண்ட போரினை மேற்கொண்டு அதன்கண் வெற்றியும் பெறுபவனான சோழன். அவனுக்குரிய, பொருள்கள் நிறைந்த பாக்கத்தின் கண்ணே வழங்குதலினின்றும் அமையாதிருக்கின்ற, முழங்கும் பெருங்கடலின் பெருந்துறையிடத்து அலைகளினும் பலவாக, அவள்மாட்டு யாம் விடுக்கும் தூதும் இனி ஒழிவின்றிச் சென்று கொண்டிருப்பதாக!