பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 95


மரங்களிற் கிடந்து அசைந்துகொண்டிருக்கும். தெளிந்த கடற்பரப்பினை உடைய, அத்தகையதான, தங்குதற்கு இனிய, எம்முடைய ஊர்க்கு, இன்று இங்கேயே தங்கிச் செல்லுமாறு, நீ வந்தால் என்னவோ?

பசுமையான மீனுக்கு விலைமாறிய வெண்ணெல்லின் மாவினைத் தயிரிட்டுப் பிசைந்து ஆக்கிய கூழினை, நினக்கு உண்ணுதற்கு உரியதாகயாம் தருவோம். வடநாட்டவர் கொண்டுதந்த வெண்ணிறம் அமைந்த வட்டக்கல்லிலே. குடமலையாகிய பொதியிலின் சந்தனக் கட்டையினைத் தேய்த்துப் பிற மணப்பொருள்களையும் கூட்டி உண்டாக்கிய வண்டுகள் ஆரவாரிக்கும் மணச்சாந்தினையும் நினக்கு அணிவிப்போம்.

பல நாளும், நின் வருத்தம் நீங்கப் பகற்பொழுதிலே வந்து, புன்னை மரங்களையுடைய அழகிய சோலையின் இனிதான நிழலில் பொழுதைக் கழித்துக்கொண்டு, மாலைப் பொழுது வந்து சேர, அதனை நோக்கியதும், நின் பாகன் குதிரைகளைப் பூட்டுதலை ஆராய்ந்தவனாக வளவிய நின் தேரினைச் செலுத்த, நீயும் மீண்டு நின்னூர்க்குச் செல்லுதலை விரும்புதலை இனியேனும் கைவிடுவாயாக!

சொற்பொருள்: 1. எவ்வம் - காமநோயால் வந்துற்ற துன்பம். 2. பொதும்பு - சோலை; கழிப்பி - கழித்து. 3 மாலை மால்கொள மாலைப்பொழுதும் மயக்கங்கொண்டு வந்ததாக, பண் ஆய்ந்து - பூட்டுதலை ஆராய்ந்து; பண்ணல் - பூட்டல், 4. வண்டேர் - வளவிய தேர்; வளப்பம் பொலிவும் உறுதிப்பாடும். 6. செல்லா நல்லிசை - கெடாத நல்லபுகழ், திரையன் - குறுநில வேந்தருள் ஒருவன். 8. இளநலம் - இளமைச் செவ்வி; இளமையின் புதுப்பொலிவால் அமைந்த அழகு.10. வள் எயிறு - கூரிய பற்கள். வயமீன் - வலிமையுடைய மீன்; சுறாமீன். கொட்குதல் - திரிதல். 11. மான்றின்று - மயக்கம் கொண்டது. 12. வீட கழிய; நீங்க. 14. பசுமீன் - பசியமீன்; புதிதாகப் பிடித்துவந்த மீன். 15 மிதவை கூழ், ஆர்த்துவம் நினக்கே - நினக்கு யாம் உண்பிப்போம்; 'மாவார்குநவே' எனவும் பாடம். அதற்கு நின் குதிரைகள் உண்பதாக என்று பொருள். 17. குடபுல உறுப்பில் - மேற்கு மலையாகிய பொதியிலினின்றும் பெற்ற சந்தனத்தில், 19. எல் - பகற்பொழுது. 20. கூர்வளி கடுங்காற்று; புயற்காற்று. 21. கோட்சுறா கொல்லும் தன்மையுடைய கொடிய சுறாமீன். 24 உறைவின் ஊர் - தங்குதற்கு இனிதாயிருக்கும் ஊர்.