பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

அகநானூறு -நித்திலக் கோவை


பூத்துக் குலுங்கி அப்பூக்களினின்றும் தேன் வழிகின்றது என்பது கருத்து. விளிக்கும் - கூப்பிடும்; கூவும். 4. நாடார் காவிரி - நாடுகளை உண்பிக்கும் காவிரியும் ஆம் கோடு-கரை மலிர்நிறை - மிக்க நிறைவு; இது மிக்க வெள்ளப் பெருக்கினை உணர்த்துவதாம். 5. கழை - ஒடக்கோல். மாக்கால் - பெரிய வாய்க்கால். 6. மயங்கு அறல் - கலங்கிய அறல்பட்ட நீர் 7 பதவு - அறுகம் புல். இமில் - தமில். 8. அசை வீட தளர்ச்சி நீங்க. 9. கோதை - மாலைபோன்ற. 10. பொற்றகை - பொன்னைப் போன்ற 11. எக்கர் - மணல்மேடு 12. யாணர் வேனில் - புது வருவாயினை உடைய இளவேனில்; புதுவருவாய் - காதலர்க்குக் கிடைக்கும் புதுப்புதுத் தகையவான இன்பநலம்.

விளக்கம்: இளவேனிலின் வருகையின்கண் மாமரம் பூத்தலும், அதன்கண் குயிலிருந்து விளித்தலும் இயல்பாம். அதனைக் குயிலும் தேம்பாய் மாஅத் தோங்குசினை விளிக்கும்’ என நயமுடன் கூறினர்.

'பதவு மேயல் அருந்து துளங்கிமில் நல்லேறும் மதவு நடை நாகொடு அசைவீடப் பருகி' எனவும் 8,9வது அடிகள் வழங்கும், அப்போது, நல்ல ஏறும், வலிமையான நடையுடைய தன் இளம்பசுவுடன் கூடித் தம் தளர்வு நீங்க இரண்டும் நீர் பருகி’ என்று பொருள் கொள்க. 'நல்லெறு தழிஇ நாகு பெயர் காலை' என்று ஐங்குறு நூற்றுத் தொடரும், இக் கருத்தினை வலியுறுத்தும். அதனைக் காண்பவள் தன் நிலைக்கு ஏங்கி வருத்தமுற்றவளாகி நொந்தனள் என்க.

யாணர் வேனில் இன்பத்தைக் காதலர்க்கு அளிக்கும் வேனிற் பருவம். 'குப்பை வார்மணல் எக்கர்த் துஞ்சும் என்றதனால், இது நெய்தற்கண் பாலை என்று உணர்க.

342. போற்றுவாய் நெஞ்சமே!

பாடியவர்: மதுரைக் கணக்காயனார். திணை: குறிஞ்சி. துறை: அல்ல.குறிப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. சிறப்பு: பாண்டியரின் ஆண்மை.

(தன் மனங்கவர்ந்த காதலியைக் கண்டு கூடிமகிழும் விருப்பத்துடன் வந்து, ஆனாற் குறித்த இடத்திலே அவளை அடையப் பெறாதவனாகிச் சோர்வுற்றுத் திரும்புகின்றான் ஒரு தலைவன். அப்படித் திரும்புங்கால் அவன், தன் நெஞ்சோடு சொல்லி வருந்துகின்ற முறையிலே அமைந்தது இச் செய்யுள்.)


ஒறுப்ப ஒவலை நிறுப்ப நில்லலை
புணர்ந்தோர் போலப் போற்றுமதி நினக்குயான்