பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 105


சொற்பொருள்: 1. வால்நிறக் களரி - வெண்ணிறம் உடைய தான களர்பட்டு விளங்கிய நிலப்பகுதி; இது கோடையின் வெம்மையினாலே ஆயது என்க. 2. உளர்தரு - வீசுதலைக் கொண்ட தண்வளி - குளிர்ந்த காற்று, மழை பெய்தலாற் காற்றும் குளிர்ந்தது என்க. 3. தொகுமுகை - தொகுதிப் பட்டு விளங்கும் அரும்புகள். 5. தோளி - தோள்களை இயக்கி மகளிர் ஆடுகின்ற ஆட்டவகையினைக் குறிப்பது . 6. மரம் பயில் - மரங்கள் செறிந்துள்ள 8. கழல் ஒலி நா - கழலின் ஒலிபோல ஒலி எழுப்புகின்ற மணியின் நாக்கு; 'சுழல் ஒலி நா' எனவும் பாடம், சுழற்சிகொண்டு ஒலிமுழக்கும் நா என்பது பொருள். 10. வள்பு - கடிவாளம். 11. கையுடை வலவன் - தேர் செலுத்தும் தொழில்வல்ல பாகன் 13. நயப் பின் - விரும்புதற்கினிய எனலும் ஆம்.

விளக்கம்: 'வளமழை பொழிந்த வானிறக் களரி உளர் தரு தண்வளி உறுதொறும் நிலவெனத்' தோன்றிற்று எனவும், 'தொகுமுகை விரிந்த முடக்காற் பிடவின் வையேர் வாலெயிற்று ஒண்ணுதல் மகளிர்' எனவும் கூட்டிப் பொருள் கொள்ளலும் ஆம். பிடவு முகை அவிழக் கார்காலத் தொடக்கம் வந்தது என அறிந்து, தலைவனின் வரவைத் தலைவி விரும்பி நலிவாள் என்பதனை, 'வான் பிசிர்க் கருவியிற் பிடவுமுகை தகைய. நிற்றுறந் தமைகுவரல்லர்’ எனத் தோழி வற்புறுத்தும் ஐங்குறுநூற்றுச் செய்யுளானும் அறியலாம்.

தோள் நோக்கி ஆடும் ஆட்டம் 'தோளி' எனப்பட்டது. திருவாசகத்துள் வரும் 'திருத்தோணாக்கம்’ என்பதும், இத் தகையவொரு ஆடன்மரபினைக் கூறும். மயிலின் ஆடலுக்கு இவ்வாடலை உவமைகூறிய நயத்தினை அறிந்து இன்புறுக

'நிழல் ஒலிப்பன்ன நிமிர்பரிப் புரவி நிழல் தழைத்தலை யொத்த நிமிர்ந்து செல்லும் குதிரை; நிழல் தழைத்தலை யொத்த என்பது, குதிரையின் நிறத்தினைக் குறித்தது என்றும் கூறுவர்.

'நகை முகம் பெறவே என்றதனால், பிரிவுத்துயரினால், அவள் நகையிழந்து வாட்டமுற்றவளாயிருப்பாள் எனப்பசப்புறு படரட வருந்திய அவளுடைய தன்மையைக் கூறியதும் அறிக.

345. காடு கவின் பெறுக!

பாடியவர்: குடவாயிற் கீரத்தனார். திணை பாலை. துறை: தோழிக்குத் தலைமகன் சொல்லியது.

(தலைமகன் ஒருவனும், அவனுடைய உளங்கலந்த காதலியொருத்தியும்இன்புற வாழ்ந்து வருகின்றனர். அந்நாளிலே