பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 113


விளக்கம்: தோளும் தொல்கவின் தொலையவும். நாளும் பசலையும் நலியவும், கவ்வை தூற்றும் வெவ்வாய்ச் சேரி அம்பல்மூதூர் அலர் நமக்கு ஒழியச் சென்றனர் அவர் ஆயினும் செய்வினை.அவர்க்கே வாய்க்கதில்’ என்று கூறும் தலைவியின் கற்புச் செவ்வியினை அறிந்து இன்புறுக பழியாலும் தனித்து வாழச்செய்த கொடுமையாலும், அவர்க்கு ஏதம் எதுவும் நேருதல் கூடுமோ என்று அஞ்சுபவள். அங்ஙனமன்றி அவர் செய்வினை வாய்க்குமாக எனவும் வாழ்த்துகின்றாள். அவன் கடந்து சென்ற வழியின் கொடுமையினைக் கூறுவாள், வயப்புலி பாயக் களிறு முழங்கக் கன்று ஒழித்து ஓடிய பிடி, பின் அதனைத் தேரும் என்றனள்.

348. நிலையா நன்மொழி!

'பாடியவர்: மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார். திணை: குறிஞ்சி. துறை: தலைமகன் சிறைப் புறத்தானாகத் தோழி சொல்லெடுப்பத் தலைமகள் சொல்லியது; தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது எனவும் பாடம்.

(பகற்போதில் தன் களவுக் காதலனைச் சந்திக்கும் விருப்பத்துடன் குறியிடத்தில் தன் தோழியுடனே கூடியவளாக வந்திருக்கின்றனள் தலைவி ஒருத்தி. அவ்வேளை, தலைமகனும் வந்து சிறைப்புறத்தானாகத் தோழி அவனைக் குறித்துப் பழிகூறத் தலைவிக்கு அதனைக் கேட்கப் பொறுக்கவில்லை. அவள் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)

          என்ஆ வதுகொல் தானே - முன்றில்
          தேன்தேர் சுவைய திரள் அரை மாஅத்துக்
          கோடைக்கு ஊழ்த்த கமழ்நறுந் தீங்கணிப்
          பயிர்ப்புறப் பலவின் எதிர்ச்சுளை அளைஇ
          இறாலொடு கலந்த வண்டுமூசு அரியல் 5

          நெடுங்கண் ஆடுஅமைப் பழுநிக் கடுந்திறல்
          பாப்புக்கடுப்பு அன்ன தோப்பி வான்கோட்டுக்
          கடவுள் ஒங்கு வரைக்கு ஒக்கிக் குறவர்
          முறித்தழை மகளிர் மடுப்ப மாந்தி
          அடுக்கல் ஏனல் இரும்புனம் மறந்துழி 10

          யானை வவ்வின தினை என நோனாது
          இளையரும் முதியரும் கிளையுடன் குழிஇச்
          சிலை ஆய்ந்து திரிதரும் நாடன்
          நிலையா நல்மொழி தேறிய நெஞ்சே?