பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 115


விளக்கம்: ‘தேன் தேர் சுவை' என்றது, தேனின் சுவையோ எனச் சுவையின் இனிமையைக் கருதச்செய்யும் இனிதான சுவை. அந்நாளைய தோப்பிக்கள் எப்படிச் செய்யப்பட்டதென்ற செய்முறையினை அறிக. மாங்கனியும் பலாச்சுளையும் தேனும் ஒன்றுகூட்டிப் பிசைந்து, மூங்கிற் குழாய்களிலே நெடுநாள் அடைத்துவைத்து முதிர்ந்தபின், அது புளித்ததோப்பிக்கள் ஆகின்றது. அதனை உண்டவர் கொள்ளும் வெறிக்குப் பாம்பின் சீற்றத்தை ஒப்பாகக் கூறினர்.

'காக்கும் கடமைபூண்ட குன்றவர். அத்தகைய கள்ளினை மாந்திவிட்டுக் கடமையினின்றும் நழுவிப்போகப், புனத்தை யானை மேய்ந்து அழித்துவிட, அதன்பின், அதனைத் தேடி வில்லுடன் காடெல்லாம் திரியும் நாடன்' என்று தலைவனைக் குறித்தனள், இது. அவனும் தன்னை முறையாக மணத்தலை மறந்து, காமத்தால் கட்டழிந்து. தன் உறுதிமொழிகளையும் பொய்த்துத், தனக்கு அலராலும் பசலையாலும் அழிவினை நேரச் செய்கின்றனன்; தன் நலனழிவிற்குப் பின்னர்த்தான் அவன் தன் கடமையை உணர்வான்போலும் என்று குறிப்பாக அறிவுறுத்தியதாம். இதனால், விரைவில் தலைவியை மணந்து கூடுதலில் அவன் மனம் செல்லும் எனத் தெளிதல் வேண்டும்.

'வான்கோட்டுக் கடவுள்' என்றது, குன்றவர் கடவுளான முருகனைக் குறித்ததும் ஆம். காவலர் மயங்கியவழி யானை புனத்தை மேய்ந்தாற்போலத், தலைவன் வரைந்து கொள்ளாது காலம் கடக்கும் போது, பசலையால் அழகு கெட்டும், அலரால் வேதனையுற்றும் அழிவள் என்பதனையும் புலப்படுத்தினாள் ஆம்.

349. எதற்கோ நினைந்தனர்?

பாடியவர்: மாமூலனார். திணை: பாலை. துறை: தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. சிறப்பு: நன்னனுக்கு உரித்தாயிருந்த ஏழிற் குன்றத்தின் தன்மை.

(தன்னுடைய அன்புறு தலைவியைப் பிரிந்து, பொருள் தேடிவருகின்ற விருப்பினனாகக், காடுபலவும் கடந்து, வேற்று நாடு சென்றுள்ளனன் தலைவன். அவனுடைய பிரிவினாலே வாட்டமுற்றுத், தன் அழகும் குன்றியவளாக நலிந்திருக்கும் தலைவி, அவனுடைய பிரிவினை நினைந்து மனம் வருந்தியவளாக இப்படிக் கூறுகின்றனள். இந்தத் துறையமைய விளங்குவது செய்யுள்)