பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

அகநானூறு - நித்திலக் கோவை


          அரம்போழ் அவ்வளை செறிந்த முன்கை
          வரைந்துதாம் பிணித்த தொல்கவின் தொலைய
          எவன்ஆய்ந் தனர்கொல் - தோழி! ளுெமன்ன்
          தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி
          உலைந்த ஒக்கல் பாடுநர் செலினே 5

          உரன்மலி உள்ளமொடு முனைபா ழாக
          அருங்குறும்பு எறிந்த பெருங்கல வெறுக்கை
          சூழாது சுரக்கும் நன்னன் நல்நாட்டு
          ஏழிற் குன்றத்துக் கவாஅன் கேழ்கொளத்
          திருந்துஅரை நிவந்த கருங்கால் வேங்கை 10

          எரிமருள் கவளம் மாந்திக் களிறுதன்
          வருநுதல் வைத்த வலிதேம்பு தடக்கை
          கல்லூர் பாம்பின் தோன்றும்
          சொல்பெயர் தேஎத்த சுரன்இறந் தோரே.

தோழி! பொருள்களின் நிறையினைத் தெரிதற்கு உதவும் துலாக்கோலை ஒத்தன குற்றமற்ற செம்மையான சொற்கள். அவற்றை உடையவன் நன்னன் என்பவன். வறுமையினால் அழிந்த சுற்றத்துடனே கூடியவராகப், பாடுந் தொழிலுடையோர் சென்றனராயின், ஊக்கமிகுந்த உள்ளத்தோடு பகைவரின் போர்முனை பாழாகும் படி வெற்றிகொண்டு, அவருடைய அரிதான அரணையும் அழித்துக் கொண்டுவந்த, பெரிதான அணிகள் முதலான செல்வங்களை, எதனையும் ஆராயாது வாரி வழங்கி உதவுபவன் அவன். அவனுடைய நன்மைபொருந்திய நாட்டிடத்தேயுள்ள, ஏழிற்குன்றத்தின் மலைச்சாரலில்-

நிறம் பொருந்தச் செவ்விதான அடிமரம் உயர்ந்துள்ள கரிய அடியினை உடைய வேங்கை மரத்தின், தீயைப் போலச் செந்நிறத்தைக் கொண்டு விளங்கும்பூக்களை உண்டு, களிறானது, தன் வரிகள் பொருந்திய நெற்றியிடத்தேயாக வைத்துள்ள வலிமை குன்றிய பெரிய கையானது, குன்றிடத்தே ஊர்கின்ற பாம்பினைப் போலத் தோற்றம் அளிக்கும். அத்தகைய மொழி வேறுபட்ட நாட்டிடத்த தான, சுரநெறியினையும்கடந்து சென்றவர் நம் காதலர்.

அங்ஙனம் சென்ற அவர்-

அரத்தால் பிளந்து, ஆக்கப்பெற்ற அழகிய வளைகள் செறிந்த எம் முன்கையினைத், தாம் எம்மை வரைந்து கொண்டவராகப் பற்றிக்கொண்டு தலையளிசெய்த, அந்தப் பழைய எம் அழகெல்லாம் தொலைந்துபோகுமாறு, எதனைத் தான் அமைவது குறித்துக் கருதினாரோ? அதனை யான் அறியேனே?)