பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 119


சங்குகள் கல்லென ஆரவாரிக்க, ஆரவாரத்தையுடைய கொற்கைப்பட்டினத்தோர் தம்மை எதிர்கொண்டு வரவேற்குமாறு, படகுகளிலே வந்து கரையிறங்குவர். மணல் திரண்டு கிடக்கும் நெடிய கரையான அவ்விடத்தே, எம் முடைய சிறிய நல்ல ஊரானது, அதோ தோன்றுவதனைப் பாராய்!

வளைந்த நுகத்திலே பூட்டியிருக்கப் பெற்றிருக்கின்ற திரண்ட மணியினையுடைய குதிரைகளை, நெடிய தேரிலே பூட்டும்படியாகப் பாகனை ஏவுதல்வேண்டா. உயரிய எழில் கொண்ட குளிர்ச்சியான கண்களையுடைய இவளின் பொருட்டாக, இன்றிரவு எம் ஊரிலே தங்கியிருந்து செல்வாயாக!

சொற்பொருள்: 1. குரல் - கொத்து, தினைக் கதிரைப் போல விளங்குவது எனலால் குரல் என்றனர் போலும் காவி செங்கழுநீர்ப்பூ செங்குவளை எனவும் கூறுவர். 2. எறிதிரை-கரையிடத்தே மோதுகின்ற அலைகள், ஓதம் - கடற்கரையிடத்தான நீர்க்கசிவு 4. இருஞ்சேறு - கரிய சேறு. அளை - வளை. நிவப்ப - வளையினின்றும் மேலே எழ. 5. பாடு ஆன்றின்று - ஒலி அடங்கியதாய் உள்ளது. 6. கொடுநுகம் - வளைந்த நுகம். கணைக்கால் - திரட்சியுள்ள கால். அத்திரி கோவேறு கழுதை, 7. வடிமணி - வடித்தலையுடைய மணி. 8. இவள் குறையாக இவள் பொருட்டாக, 10. எறி சுறா - கொல்லுந் தன்மையுடைய சுறாமீன். 12 ஒலிதலைப் பணிலம் - ஒலிமுழக்கும் தன்மையுடைய சங்கினம். 14 கோடு - கரை.

விளக்கம்: நெய்தலும் காவியும் கூம்புதலும், துறை ஓதம் தரலானாத தன்மையுடைமையும், அவலன் நிவப்ப வென்றலும், துறை பாடான்றமைந்த தன்மையும், பகற் போது கழிந்து, மாலையும் மயங்குவதை உணர்த்துவனவாம். 'அத்திரி தேர் பூண ஏவாது’ என்றமை, அந்நாளிலே கோவேறு கழுதைகளையும் தேர்களிற் பூட்டிச் செலுத்தும் மரபு நிலவிற்று என்பதனைக் காட்டுவதாம்.

தம்முடைய குடிப்பெருமையினைக் கூறுவாள், இலங்கிரும் பரப்பின்... கொற்கை எதிர் கொள இழிதரும் என்று கூறினள். 'வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர்' என்றது, அந்நாளிலே கொற்கைத்துறையில் பரதவர் முத்தும் சங்கும் கடலுள் மூழ்கி எடுத்த செயலாற்றலையும், ஒலி தலைப்பணிலம் ஆர்ப்பக் கல்லெனக் கலிகெழு கொற்கை எதிர்கொள இழிதரும் என்றது, அவருடைய அரிய தொழிற்பாட்டைக் கொற்கைப் பேரூர் ஆர்வமுடன் வரவேற்றுப் போற்றிய சிறப்பினையும் குறிப்பதாம்.