பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 133


நெடுந்தெருவின் இடையே கதுமென என்னைக் கண்டு, என்னுடைய பொன்வளை விளங்கும் முன்னங்கையினையும் பற்றினனாக, 'அன்னாய்! என்று யானும் கூவினேன். அந் நிலையே பழமையாக வருகின்ற தன் விருப்பத்தினைக் காத்தலற்றவனாக, அவன், என் கையினை விட்டும் விட்டனன்.

நன்னன் பிரம்பிலே, சிறிய பணையினைச் செய்வோன் அரக்கோடுஞ் சேர்த்து அமைத்த சாணைக் கல்லினைப்போல, மீண்டும் எழுதலற்ற நாவினையுடைவள், ஆகினேன். என் குரல் கேட்டு வந்த யாய்க்கு, அதனை யான் கூறினேனும் அல்லேன்!

நல்ல தேனினையும் கடுமையான களிறுகளையும் உடையவர் சோழர்கள். அவர்களது வழியினனாகிய, நீண்ட கதிர்களைக் கொண்ட நெற்பயிர் விளங்கும் வல்லத்தின் உரிமையுடையவன் நம் தலைவன். அவன் நல்ல அடியினையே நினையான் எனினும், பகைவரைக் கைப்பற்றுதற்கு முயற்சி கொள்ளுகின்றவன் ஆவான்! அங்ஙனமன்றியும், தழைத்த பலவாகிய கூந்தலை உடையாய்! அருள் செய்தலின்றி, நம்மை வருத்தி, அவன் சாகும்படியே செய்தனனாயினும். அந்தக் கொலையும் நம்மளவில் பழுதுபட்டது அல்லவே! ஆகலின், நின் குறிப்பு என்னையோ? அதனை உரைப்பாயாக!

சொற்பொருள்: 1. கொளீஇய கழாலில் கொண்டிருந்த கலங்களைக் கழுவுதலால், 2. உகுவார் - சிந்தும் கலங்களின் ஒழுக்கு. 3. கம்புள் சம்பங்கோழி. இயவன் - இயக்குபவன் வாத்தியக்காரன். 5. கதுமென - விரைய. 8. தொன்னசை பழையதான விருப்பம்; பல நாளும் தொடர்ந்து கொண்டிருந்த ஆராவிருப்பமும் ஆம், 9. காரோடன்-பணைசெய்வோன். பயின் அரக்கு 12. சோழர் மருகன் - சோழர் வழிவந்தோன். 14 நல்லடி - நல்ல அடிகள்: 'நல்லளி’ எனவும் பாடம்; நல்ல அருளிச் செய்தலை உடையன் என்பது அப்போது பொருளாகும். 15. கதுவ பற்ற 16 ஒலிபல் கூந்தல் - தழைத்த பலவாகிய கூந்தல் 17. பழுது - குற்றம்.19. பிரம்பு - பிரம்பு என்னும் பெயரையுடைய மலை, பறம்பு எனவும் பாடம்.

விளக்கம்: நீரோடையின் மேற்புறத்தே மதுக்கலங்களைக் கழுவக், கீழ்த்துறைக்கண் மதுக்கலங்களோடு வருகின்ற நீரைக் குடித்த ஆமையானது பிறழ்தலும், சம்பங்கோழி அதனைத் தள்ளுதலும், கிணைப்பறை பிறழ்தலையும் இயக்குவானையும் போலத் தோற்றியதென்க. இது, புதுநீர் விழவிற்கண்ட பரத்தையுடனே காமுற்று மயங்கிக்கிடந்த தலைவன், பாணன் இயக்கியபடியெல்லாம் அங்கே துய்த்துக் கிடந்தவனாக, அந்த நலந்தோற்ற வந்தனன் என்பது உள்ளுறையாக உரைத்ததாம்.