பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

அகநானூறு - நித்திலக் கோவை


கொண்டவளாகி, இத்தன்மையாக வெளிறிப் போயிருக்கும் நின்னுடைய உடல் வேறுபாட்டை பார்த்து, அன்னையும், அதன் காரணத்தைக் கேட்டனளாயின், என்ன சொல்வேன்?

பெரிய மலையிலே பொருந்தி வழிந்தொழுகும் நீண்ட வெள்ளிய அருவியானது, நெற்றிப் பட்டத்தையுடைய யானையின் மேலாக அமர்ந்து மிக உயரத்தே எடுக்கப் பெற்றுள்ள, அசையும் வெண்துகிற் கொடியினைப்போலத் தோன்றும், சிகரம் உயர்ந்த மலை நாட்டிற்கு உரியவன் நம் தலைவன், அவன் நம்மை அடையுமாறு செய்வித்த இந்நோயினை, அந்தோ, யான் என்னவென்று அன்னைக்கு எடுத்து இயம்புவேன்?

சொற்பொருள்: 1. நீலம் - நீலமணி, எருத்து கழுத்து. 2. காமர்-அழகிய.2. இன் தீங்குரல்-இனிமை மிக்க குரல். குவன்றி - நெருங்கி. சீர் - தாள அறுதி. 6. குறுந் தொடர் - குறுகக்கட்டிய மாலைகள். அடைச்சிய - செருகிய கூழை கூந்தல், 8. உயக்கம் - வருத்தம். புலம்பு - தனிமை. 13. ஓடை யானை - ஓடையினை யுடைய யானை: ஓடை நெற்றிப்பட்டம்.15. கோடு உயர் வெற்பு - முடிகள் உயரமாக அமைந்திருப்பதான மலை.

விளக்கம்: மகளிர் ஆயத்தாருடன் கூடிச் சுனையிடத்தே ஆடி மகிழுகின்ற எழிலுக்கு ஒப்பாக, மயிலினம் தோகை விரித்து ஆடுதலைக் கூறினர். தோகை இன்றீங்குரல எனக் கூறியது, "சுனையாடி மகிழும் மகளிரும் தம்முட் பேசிய வராக ஆரவாரத்துடன் நீராடுவர் என்பதாம். 'நின்னிறம் நோக்கி அன்னை வினவினளாயின் என்னென உரைக்கோ? யானே? எனத் தோழி கூறுவதைக் கவனிக்கவும்! நின் உருவத்தோற்றம் மாறுபடுவதை அன்னை அறிந்து கேட்டால் யான் அவளுக்கு யாது கூறுவேன்? ஆதலின், என் பொருட்டாவது நீ வருந்தாதிரு' எனக் கூறுவாள்போலத் தலைவியின் பிரிவுத்துயரினைத் தலைவனுக்குப் புலப்படுத்துகின்றனள் அவள். மலைவீழ் அருவி, யானை மேலாக உயர்த்துள்ள அசையும் வெண்கொடிக்கு உவமையாக உரைக்கப்படுவதனையும் அறிந்து இன்புறுக.

359. ஏன் செயலிழந்தனை?

பாடியவர்: மாமூலனார். திணை: பாலை, துறை: பிரிவிடை

வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. சிறப்பு: வானவரம்பனுக்கு உரித்தான வெளியத்தின் வளமை, கள்வர் கோமான் புல்லிக்கு உரியதான வேங்கடமலையின் தன்மை.