பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 143


பொன்னென்னும்படியாக நல்ல மரமாகிய நறும்பூக்கள் உதிர்ந்து பரவும் புன்னைமரங்களுள் நறிய பொழிலிடத்தே, செய்த நம்முடைய குறியிடத்திற்கு இரவின்கண், நீயும் வருவாயாக.

சொற்பொருள்: 1 கழிப்பி - கழித்து. 2 ஒருகால் ஊர்தி ஒற்றைச் சக்கரத்தையுடைய தேர். 3. குடவயின் மாமலை - மேற்றிசைக்கண் உள்ள பெருமலை. 4. அடைஇய - அடைந்திருந்த கணைக்கால் நெய்தல் - திரண்ட தண்டினையுடைய நெய்தல். 6. வெருவரு கடுந்திறல் - அச்சம்வரத்தக்க கடிய திறல் இருபெருந்தெய்வம் - சிவமும் சக்தியுமாகிய தெய்வம் சிவனும் திருமாலும் எனவும் கூறுவர். 10. புலம் பினள் - தனிமை கொள்வாள். தெய்ய - அசை 11. பாணி - தாளத்துடன் ஒத்துச் செல்லல் குதிரையின் ஒட்டத்தில் இந்தத் தாள அமைதியைக் காணலாம். 12, தெவிட்டல் - ஒலித்தல்; குதிரையின் கனைப்பு - ஒலியைக் குறித்தது. கலிமா - செருக்கிய குதிரை. 15. உரவு நீர் - வலிமையுள்ள நீர்; கடல் நீரைக் குறித்தது. 17. சேக்கும் தங்கும்.

விளக்கம்: மாலைக் காலத்துச் செக்கர் வானமும் நீலக்கடலும் அடிவானத்து ஒருங்கே இணைந்திருக்கும் காட்சியைச் செம்மேனியனான சிவபிரானும், நீலமேனியின் ளான அம்மையும் உருவால் ஒன்றாகிப் பொருந்தியிருக்கும் தன்மை போலிருந்தது என்கின்ற நயத்தினை அறிந்து இன்புறுக.

"துஞ்சுவூர் யாமத்துத் தெவிட்டல் ஒம்பி" என்றது, இரவிற் குதிரை கனைப்பதனால், துஞ்சும் ஊர் துயிலெழ, அதனால் இவர் களவும் வெளிப்பட்டுவிடுவதாகும் என்பதனாலாம். அது இயலாதாகவே, இரவுக்குறி நேர்வதும் இயலாதாகும் என்பதனை உணர்த்தினாள்.

'அன்றில் பனைமிசைக் சேக்கும் முன்றில்’ எனவே, அது இரவிற் குரலெடுத்து வீட்டவரை எழுப்பிவிடலும் நேரலாம் என்றனளாம்.

இதனால், தலைவன் இரவுக் குறியினை நாடாது, தலைவியின் துயரைத் தீர்ப்பதனைக் கருதியவனாக, அவளை விரைந்து மணந்து கொள்வதிலேயே முனைவான் என்க.

361. மருளி நெஞ்சே!

பாடியவர்: எயினந்தை மகனார் இளங்கீரனார். திணை: பாலை. துறை: பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.