பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ★ 151


வேந்தன் கொடிய சினத்தை உடையவன். அகன்ற பெரிய பாசறை அவனுடையது. வெற்றிகொள்ளும் விருப்பமுடன் நம்மையும் நினையாராக அதனிடத்தே நம் காதலர் இருக்கின்றனர். நாம் வருத்தமுற, நம்மைக் கொல்வதைக் குறிக்கொண்டது போன்ற மாலைக் காலமானது விரைந்து வந்துறுகின்ற காலத்திலே, அதன் கொடுமையைக் கடத்தலோ நமக்கு அரிதாகும்! நாம் யாது செய்வோம்? (எங்ஙனம் ஆற்றியிருப்போம்? என்பது கருத்து)

சொற்பொருள் : 1. மாதிரம் - திசைகள். புதைய மறைய மேகச்செறிவால் நாற்றிசையும் இருள் கொள்ள என்பது கருத்து. 2. ஏறு-இடியேறு; அவல் - பள்ளம்.3 நுணல் -தேரை.7 இல்லம் - தேற்றா 8. மலிர -நிறைய.12. நோதக - வருத்தமுற,

விளக்கம்: 'ஏறுடைப் பெருமழை, மாதிரம் புதையப் பாஅய்க் கால்வீழ்த்துப் பொழிந்தது' என்க. 'ஆய்பொன் அவிரிழை தூக்கியன்ன நீடிணர்க் கொன்றை கவின்பெற’ என்றதனால், இது சரக்கொன்றை என்க. 'வென்றி வேட்கை யொடு நம்மும் உள்ளார்’ என்றதனைச் சிந்திக்கவும். 'வென்றி வேட்கை அவருக்கு இருக்கலாம்; எனினும், அத்துடன் நம்மையும் நினைத்துக் கொள்ளல் வேண்டாமோ? நம்மை நினையாராய் 'வென்றிவேட்கை மட்டுமே உளங் கொண்டவராயினரே? என்ற ஏக்கம் புலப்படுதலைக் காண்க. 'பகைவரை - வென்று வாகை சூடுவதனைக் கருதும் அவர் நம்மை, நோதகக் கொலைகுறித்தன்ன மாலை துணைதரு போழ்தின், அதனின்றும் காத்தற்கு நினைத்திலரே' என வருந்துவாள், அவரால் கைவிடப்படுதலின், தான்அதனை நீந்தல்அரிது’ என்கின்றனள்.

365. நினைந்தனை நெஞ்சமே!

பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார். திணை : பாலை. துறை: தலைமகன் இடைச்சுரத்து நின்று சொல்லியது. சிறப்பு : கழுவுள் என்பானுக்குச் சொந்தமான காமூரைப் பற்றிய செய்தி.

(தலைமகன், தன் அன்புறு தலைவியைப் பிரிந்தவனாகப் பொருள் வேட்கையுற்றுக் காட்டுவழியே செல்லுகின்றனன். இடைவழியிலே, அவனுடைய நெஞ்சத்தில் அவளுடைய நினைவு மிகுதியாக எழுந்து அவனை வருத்தத் தொடங்குகின்றது. அப்போது, அவன், தன் நெஞ்சிற்குச் சொல்லுகின்ற முறையிலே அமைந்தது இந்தச் செய்யுள்)

அகல்வாய் வானம் ஆலிருள் பரப்ப
பகல்ஆற்றுப் படுத்த பையென் தோற்றமொடு