பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 3


(தலைவனும் தலைவியும் களவு ஒழுக்கத்திலே தம்முட் கலந்து கூடித் திளைத்துவந்த காலம். ஒருநாள் பகல்வேளையிலே, குறித்த இடத்திற் சென்று, தலைவியும் தோழியும் தலைவனுக்காகக் காத்திருக்கின்றனர். அவன் வந்து பக்கலில் ஒதுங்கி நிற்பதை அறிந்த தோழி, அவன் உள்ளத்தை விரைவிலே தலைவியை மணந்து கொள்வதிற் செலுத்துதற்கு விரும்பியவளாகத் , தலைவிக்குச் சொல்வாளைப்போன்று, அவனும் கேட்டு உணருமாறு சொல்லுகின்ற முறையில் அமைந்தது இச் செய்யுள்)

சிலம்பிற் போகிய செம்முக வாழை
அலங்கல் அம்தோடு அசைவளி யுறுதொறும்
பள்ளி யானைப் பரூஉப்புறம் தைவரும்
நல்வரை நாடனொடு அருவி ஆடியும்
பல்லிதழ் நீலம் படுசுனைக் குற்றும் 5

நறுவி வேங்கை இனவண் டார்க்கும்
வெறிகமழ் சோலைநயந்துவிளை யாடலும்
அரிய போலும் - காதல்அம் தோழி! -
இருங்கல் அடுக்கத்து என்னையர் உழுத

கரும்பெனக் கவினிய பெருங்குரல் ஏனல்
10


கிளிபட விளைந்தமை யறிந்தும் 'செல்க' என
நம்மவண் விடுநள் போலாள் கைம்மிகச்
சில்சுணங் கணிந்த செறிந்துவீங் கிளமுலை
மெல்லியல் ஒலிவரும் கதுப்பொடு

பல்கால் நோக்கும் - அறனில் யாயே.
15

அன்பிற்குரியே தோழியே!

மலையிலே நீண்டு வளர்ந்திருக்கும் செவ்வாழையினது அசைந்துகொண்டிருக்கின்ற இலைகள், அசைக்கும் காற்று மோதும் பொழுதெல்லாம், தன் அடி நிழலிலே துயில் கொண்டிருக்கும் யானையின் பெரிய முதுகினைத் தடவி விட்டுக்கொண்டிருக்கும், நன்மை பொருந்திய மலைநாட்டிற்கு உரியவன், நம் தலைவன்!

அவனுடனே அருவியாடியும், சுனையிடத்தே பொருந்திப் பலவாகிய இதழ்களையுடைய நீலப்பூக்களைப் பறித்தும், வண்டுகள் கூட்டமாக மொய்த்து ஆரவாரிக்கும்படியாக மணங் கமழும் நறிய பூக்களையுடைய வேங்கைமரச் சோலையிடத்தே விருப்பமுடனே கூடி விளையாடியும், இன்புற்றனவெல்லாம், இனி நமக்கு அரிதாகிவிடுவன வாகும் போலும்!