பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

அகநானூறு - நித்திலக் கோவை



ஞாழலின் வண்டுமொய்க்கும் புதுமலர்களாற் கட்டிய கண்ணியினைச் சூடியவனாக, நெய்தலின் குளிர்ச்சியான அரிய பசுமையுள்ள மாலை மார்பிடத்திலே கிடந்து அசைந்தாட, அந்திப் போதிலே, கடற்கன்னியானவள் கரையிடத்தே வந்து நின்றாற்போல, நீ இக்கானற் சோலையிடத்தேயே தனித்து நிற்க, யான், வெறியாட்டத்தை மேற்கொண்ட பாவையினைப் போல்வதாகிய என் அழகினைத் துறந்து, ஆடுமகளைப் போல மீண்டு செல்லுதற்கும் இயலாதவளாக உள்ளேன். அதனால், இவ்வூர் அலர்,கூறினும் கூறுக!

சொற்பொருள்: 1. வளைவாய் - வளைவான, 2. எல்லும் எல்லின்று பகற்போதும் ஒளிகுறைந்தது. 3. புகரில் நீழல் - புள்ளியற்ற நிழல். 5. காயல் - காய்ந்த புல், தேயா - வளமை குன்றாத, 6. நோய் - காமநோய் 7 கடிப்படுவல் - காவற்படுவேன். 9. ஞாழல் கொன்றைப்பூ.10. நெய்தல் - நெய்தற்பூ.1. துயல்வர - அசைந்தாட 12. கடல்கெழு செல்வி - கடற் கன்னி. 14. வெறி கொள் பாவை - வெறியாடலை மேற்கொண்ட பெண். அணி -அழகு.

விளக்கம்: 'கோதையர் ஆகிய இளையோர்' என்று கூட்டுக; இது, தலைவியுடன், வந்துள்ள ஆயத்தாரைக் குறித்தது. அவரெல்லாம் வீடு திரும்பினர்; ஆகவே, அவளும் திரும்புதல் வேண்டும் என்றனள். 'நல்லில் நோயோடு வைகுதி யாயின் நுந்தை அருங்கடிப்படுவலும் என்றி' என்றது. தலைவி இரவிலும் தலைவனைப் பிரிந்திருக்க ஆற்றாளாகப் படுகின்றதுயரினையும், அதனையறிந்தால் அவைக் காவலுக்கு உட்படுத்தும் அவளுடைய தந்தையின் கடுமையினையும் கூறியதாம். தலைவியின் அணங்கனைய பேரெழிலைக் குறிப்பாள், 'கடல்கெழு செல்வி கரைநின்றாங்கு' என்றனள். இதனாற், கடற்கன்னியை வேட்டு, நெய்தல் மகளிர் வெறியயர்கின்ற வழக்கம் உடையவர் என்பதும் அறிக. 'பெயர்தல் ஆற்றேன்’ என்றது. தலைவியின் நலத்திற்கு உறுதுணையாகிய தோழி, அவளது துயரின்கண்ணும் அவளைவிட்டு அகலாது உடனிருக்கும் நட்புச் செவ்வியைப் புலப்படுத்துவதாகும். 'அலர்க இவ்வூர்’ எனவே, ஊரலர் எழுவதனையும்' குறிப்பிட்டதாம். இதனால், தலைவியை நேசிக்கும் தலைவன் அவளை வரைந்து கொள்ளுதலில் விரைவதற்கு நாட்டங் கொள்பவன்.ஆவான் என்க.

371. பறவை விழையும் கூந்தல்!

பாடியவர்: எயினந்தை மகனார் இளங்கீரனார். திணை: பாலை. துறை: பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன், தன் நெஞ்சிற்குச் சொல்லியது