பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

அகநானூறு - நித்திலக் கோவை


வண்டுகள் விரும்பிவந்து மொய்க்கும், மலர் நிறைந்த கூந்தலையுடைய நம் காதலியின் கண்கள், நீர் ஒழுக்குற்றதாகி, எத்தகைய பெருந்துன்பத்தை அடைந்திடுமோ?

சொற்பொருள்: 1. விளிம்பு-வில்லின் இரு முனைகள், விசை - விரைவு, நோன்மை - வலிமை. 2. செவ்வாய்ப் பகழி - குருதிபடிதலாற் சிவந்த முனையையுடைய அம்பு.செயிர்நோக்கு - சினந்தங்கிய நோக்கு 4. புடையாட பக்கலில் விளையாடிக் கொண்டிருக்க.5. இரலை - ஆண்மான். 6. மேய்பதம் உண்ணும் உணவு.சிறுமை - வருத்தம். நோய் - துன்பம்.7.நெய்தலம் படுவில் - களர்நிலத்துச் சிறுகுழியில் 8. இனைந்து மிகத் துயருற்று. 9. பைதற - பசுமை அற்றுப்போக, 10 பனிவார்ந்து - கண்ணிரை ஒழுகவிட்டு

விளக்கம்: பாலையிடத்துள்ள மறவர்கள் ஆறலைத்து உண்ணுதலையே வழக்கமாக உடையவர் என்பார், 'செவ்வாய்ப் பகழி’ என முன்னமும் அவரால் எய்யப் பெற்றுச் செத்தவரின் குருதியாற் சிவப்புற்றிருக்கும் அம்பு என்றனர். வேட்டையாடுவோர் ஆண் விலங்குகளை வேட்டையாடுதலையே பெரும்பாலும் கைக்கொள்வர்.இங்கே பெண்மானைக்கொன்ற கொடுமையினைக் கூறி, அதன் இறப்பால் உணவும் நீரும் வெறுத்துத் துயருற்ற ஆண்மானையும் கூறினர். இதனால், தலைவனின் உள்ளத்தும், தன்னுடைய பிரிவினாலே உயிர் வெதும்பித் துடிக்கும் தலைவியின் நினைவு எழுதலும், அவளுக்குத் தான் உதவுதல் வேண்டும் என்ற அருள் தோன்றுதலும் இயல்பாகும். “வீதேர் பறவை” என்றது வணடினை.

'கண் என்ன ஆகுமோ? எனக் கருதியது, அவன் பிரிந்து வருங் காலத்தே, அவள் கலங்கிய கண்ணினளாக நின்ற நிலையினை நினைந்தும், துயருற்றுநீர்சொரிதலுறுவாள் எனக் கருதியும் ஆம், எஃகுறு மாந்தரின் இனைந்து கண் படுக்கும்’ என்றது, அம்பு தைக்கப்பெற்ற வழிச் செல்வார், துடிதுடித்துச் செத்து வீழ்ந்து கண்மூடிக் கொள்வதனைப் போல, அந்த இரலையும் கண்மூடி உயிர்விடும் என்றதுமாம்.

372. அருமை உடையவள்!

பாடியவர்: பரணர். திணை: குறிஞ்சி. துறை: அல்ல குறிப்பட்டுப் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. சிறப்பு: நன்னனின் பாழிப்பேரூர், அஞ்சியின் ஆற்றல்.