பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

அகநானூறு - நித்திலக் கோவை



பெரிதான மூங்கிற்கொம்பிலே தொடுத்த, பலரிலிருந்து ஆடுகின்ற ஊசலின், ஏறியும் இறங்கியும் ஆடிக்கொண்டிருக்கும் கயிற்றினைப் போன்று, செல்கையினும் திரும்புகையினுமாக உழன்று வருத்தம் உற்றனை

நீண்ட வழியினைக் கடந்து போதற்கு உரியதான குதிரைமலைக்குத் தலைவன், கூர்மையான வேலினைக் கைக்கொண்டோனான அஞ்சி என்பவன். கடிய பகைப்புலத்தினையும் வருத்துகின்ற கொடிய வில்லினைக் கைக்கொள்பவர் அவனுடைய படைஞர். அவர்கள் தம் பகைவரின் ஆநிரைகளைக் கைப்பற்றுகின்ற போரினிடத்தே மிக்கொலியுடன் அடிக்கப்படுகின்ற பெரிதான உடுக்கையின் கைவாரைப் போன்று, செறிவதும் நெகிழ்வதும் ஆகியும் வருந்தினை மேய்தலின் பொருட்டாகத் தன் மணியினை உமிழ்ந்து வைத்துப் பின் அதனை இழந்துவிட்டுத் துடிக்கும் நாகப்பாம்பினைப் போல, நீ மிகவும் தேம்புதலுறவும் செய்தனை!

நம்மை வருத்திய காதலியானவள், வேந்தர்களது கைக் கொள்ளுதற்கான முயற்சியினையும் தணித்தற்குரிய வலி பொருந்திய அரணினைப் போலக், காவல் மிகுந்தவளாயினள்! அதனால், ஈண்டு எய்துதற்கு அருமை உடையவள் அல்லவோ?

சொற்பொருள்: 1. தெறுதல் - தாக்கி வெல்லுதல்; வெல்லுதற்கு அரிய முறைமையினையுடைய கடவுள் என்றலால். பிற தெய்வங்களை ஏவியும், அதனைப் போக்கி அச் செல்வத்தைக் கொள்ளல் யார்க்கும் அரிது என்று கருதுக. 2. நனந்தலை - அகன்ற இடம். 4. வேண்முதுமாக்கள் - வேளிராகிய தொன்மைக் குடியினர். 7 இரும்பணை - பெரிய மூங்கிற்றண்டு ; பெரிய கிளையெனினும் ஆம், 9. நெடு நெறிக் குதிரை - நெடுவழி நடந்து அடைதற்குரிய குதிரை மலை; இது அஞ்சிக்கு உரியது. 10. கடுமுனை-போரின் முன்னணி.12துடி-துடிப்பறை, உடுக்குப் போல்வது. iங்குதல் - செறிதல். நெகிழ்தல் - தளர்தல். 14 தேம்புதல் - வருத்தமுற்றுத் தளர்தல் 15. கோண்டனி எயில் - பிறர் கொள்ள நினைக்கும் நினைப்பினைத் தணிவிக்கும் வலிமையுடைய எயில்,

விளக்கம்: தலைவி இற்செறிக்கப்பட்டுக் காவல் உடையவள் ஆயினதனாற்றான், குறித்த இடத்திற்குப் பலநாளும் வரவில்லை என்று கருதும் காதலன், ‘பாழியில் காவலுடன் வேளிர் வைத்த செல்வத்தினும் காட்டில் அடைதற்கு அரியவள்’ எனவும், 'கோண்தணி எயிலிற் காப்புச் சிறந்து ஈண்டருங் குரையள்’ எனவும் கூறுகின்றனன். இதனால், 'தான் அல்லகுறிப்பட