பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

அகநானூறு - நித்திலக் கோவை



சொற்பொருள்: 1. மகிழ்நன் - தலைவன். செய்கடன் - செய்தற்கு உரிய கடமைகள். 2. கடிபுனல் - மிக்க புனல்; புதுப் புனல்; காவலையுடைய புனலும் ஆம். கற்றென நீர்விளையாடப் பயின்றுகொண்டிருந்ததாக 3 மலி புனல் - மிக்கெழுந்த புனல், படப்பை - தோட்டம். 4. ஒலி கதிர்-தழைத்த கதிர். முன் துறை - ஆற்றின் கரையிடத்துள்ள நீராடுதுறை. 5. கரிகால் - கரிகால் வளவன். 6 தண் பதம் கொண்டு - புனல் விழாவிற்கான ஒப்பனைகளை மேற்கொண்டு,9.பாண்டில் கஞ்ச தாளம். 10. அணி நயந்து - அழகிலே விருப்புற்று. 12. புலத்தல் - வருந்துதல் 13 அசும்பு - சேறு, 14 அழற்கொடி - ஒள்ளிய கொடி. 15. தோடு - இதழ். வாங்கு பீள் - வளைந்த கதிர். 16 துய்த்தலை - துய்யினையுடைய தலை. 17. குரங்குஉளைப் புரவி - வளைந்த பிடரிமயிரினையுடைய குதிரை.

விளக்கம்: 'கல்லா யானை கடிபுனல் கற்றெனப்... புனல் நயந்து ஆடும் அத்தி' என்று கொள்ளலும் பொருந்தும்.இதனால் கட்டற்று நீர் விளையாட்டிலே ஈடுபட்டிருந்தனன் என்க. அவன் ஆற்று வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்பட்டதற்கும், இந்தக் கட்டு மீறிய துணிச்சற் போக்கே காரணமென்பதும் இதனால் உய்த்து உணர்தற்கு உரியதாகும்.

'கலிகொள் சுற்றம்’ என்றது, புனல் விளையாட்டுக் களிப்பின் ஆரவாரத்துடன் திகழ்ந்த அரசச்சுற்றம் என்க. 'சுற்றமொடு கரிகால் காணக் காவிரி அணிநயந்து கொண்டொளித்தனள் என்றாற்போலத், தன்னுடைய சுற்றமும் பிறரும் காணப், புதியளான பரத்தை ஒருத்தி தலைவனை நயந்து, தன்பால் அகப்படுத்திச் சென்றனள் என்று கொள்க.

'அந்தும்பு வள்ளை அழற்கொடி மயங்கி வண்தோட்டு நெல்லின் வாங்குபிள் விரியத் துய்த்தலை முடங்கிறாத் தெறித்தலைப்' போலச், சேரிப் பரத்தையான அவளும், தாழ்விலிருந்து துள்ளித் தலைவனின் உள்ளத்தினைத் தன் இளமைச் செருக்கினாலே கவர்ந்தனள் என்க.

'நும் வயிற் புலத்தல் செல்லேம்' என்றது, தான் அவன் பாற் கொண்ட காதலின் உறுதியினை விளங்கக் கூறியதாம். மேலும் தலைவியைப்போலப் புலத்தற்கான உரிமை தன்போற் காதற் பரத்தையர்க்கு இல்லையென்றதும் ஆம்.

377. ஏதிலராகியும் செல்வாரே!

'பாடியவர்: மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார். திணை: பாலை. துறை: பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.