பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

அகநானூறு - நித்திலக் கோவை


கெடுமாறு, வரிகள் பொருந்திய கரையான் அரித்திருக்கும். அதனால், தன்னுடைய பழைய அழகுகெட்டுப், பெரிதான நலமனைத்தும் சிதைந்ததாகி அச்சமிகுந்ததாகப் பொதியிலும் விளங்கும். அதனிடத்து ஒரு பக்கத்தே தங்கியிருந்து,

இனிதாக முறுவலையும் சிறிய மென்சாயலினையும் உடைய தலைவியினது பெருநலத்தினை நினைந்து, அவட்கு ஏதிலர்போல ஆகியும்-

பொருள் வேட்கை கொண்டதனாலே வந்தடைந்தோர் இரந்த செல்வத்தைப் புகழுண்டாகப், பெய்து உவக்கும் செயலைச் செய்கின்ற அருளுடையவர், மேலும் செல்வதற்குத் துணிவார்களோ? (துணியார் ஆதலின், அருள் உள்ளம் உடைய யாமும் பொருள்வயிற் பிரிதலை மேற்கொள்ளோம் என்பது முடிபு)

சொற்பொருள்: 2. சிறு புல் உணவு - சிறிய புல்லரிசியாகிய உணவு. 3. அளைச்செறித்த - புற்றிலே தொகுத்து வைத்த, 4. வித்தா வல்சி - விதையாது பெற்ற உணவு. 5. பயன் நிரை - பாற்பசுக்கள். 6. கொழுங்குடி - வளமான குடியினர். 7. அதிர்தலை - நடுங்கும் தலை. 8. கவைமனத்து கவறுபட்ட மனத்து; வல்லாடுதலில் இப்படி மனம் கவறுபட்டுச் செல்லல் இயல்பாகும். வல்ல - சூது.9. சிதலை கரையான்.10. பேஎம் முதிர் பொதியில் - அச்ச மிகுந்த பொதியிலில்.

விளக்கம்: மறவருடைய கொடிய இயல்பினைக் கூறுபவர், எறும்பு, புற்றிற் சேகரித்து வைத்த விதையாது பெறும் உணவினாலே வாழ்ந்து வருபவர் என்றனர். ஆறலை கள்வராகிய அவர், மக்களை மட்டும் வழிப்பறித்து உண்பவர் அன்று நுண்பல் எறும்பி கொண்டளைச் செறித்த உணவையும் தோண்டிப் பறித்துண்ணும் தன்மையினர் என்றனர்.

கொழுங் குடியினராக வாழ்ந்த ஊரவர், ஆறலை கள்வராகிய அவர் பல்லூழ் புக்குப் பயன்நிரை கவரவே, அவ்வூரை விட்டே போவார் ஆயினர்; அதனால், அவ்வூரும் பாழுற்றது என்றனர்.

'வல்லு வனப்பு அழியச் சிதலை அரித்தலின்' என்றதனால், வல்லு ஆடும் இடம் மரத்தால் அமைந்தது என்பது புலனாகும்.

நரை மூதாளர் மன்றத்துப் பொதியிலில் அமர்ந்து சூதாடும் வழக்கம் உடையவராக இருந்தனர். அந்நாளில் இந்த வழக்கம் இருந்ததுபோலவே, இந்நாளிலும் இருப்பதனை ஊர்ப் பொதுமண்டபங்களிற் காணலாம்.