பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

அகநானூறு - நித்திலக் கோவை



தோழி! பெரு நிதியம் நிலைத்திருக்கும் உயர்ந்தோங்கிய மனையகத்தேயுள்ள, மணவாழ்வினரான மகளிரின் கூந்தல் மணம் பொருந்துமாறு, அழகிய தளிர்களையுடைய வேங்கை மரத்தின் நல்ல பொன்னையொத்த நறிய தாது, காற்று அசைத்தால் உதிரும். விருப்பந்தருகின்ற நிறத்தினையுடைய அழகிய தோகையினையுடைய மயிலானது, வேறுவேறு இனத்தவாக வரையிடத்தே வாழ்கின்ற வருடைகளின் இளைய கடாக்களின் கொம்புகள் மோதிச்செய்த ஒலியைக் கேட்டு அச்சங்கொண்டு ஒடும். ஆடுங் களத்தே முழங்கும் கொம்பினைப் போல இனிதாக ஒலித்துக் கொண்டு, வானத்தே எழுந்து பறந்துசென்று, பசுமையான புறத்தினையுடைய மென்மையான அழகிய இடமானது வளையுமாறு, நீண்ட கணுக்களையுடைய அசையும் முங்கிலினிடத்தே, அது தயக்கமுற்றதாகி அமர்ந்திருக்கும். அத்தகைய பெருமலை நாட்டிற்கு உரியவன் தலைவன். அவன், நம்மைப் பிரிந்ததனாலே கொண்ட தனிமையும் -

அன்னையின் மாறுபட்ட பொருந்தாத பார்வையும் -

வாடைக் காற்றால் அசைக்கப் பெறும் பனிவருதலையுடைய அற்சிரக் காலத்தே, கதிர் நிறைந்த கதிரவன் மண்டிலமும் ஒளிமழுங்க, ஞாயிறு குடகடல் சேருகின்ற துன்பமிக்க மாலைப் பொழுதும்

ஆகிய இவையனைத்தும், தாக்கி நின்று எம்மை வருத்தவும், நீ எங்ஙனம் உயிர் வாழ்கின்றனை? என, எம்மிடத்தே வினவு கின்றனை.

நீங்காமைக்கு உரிய வஞ்சினம் உரைத்த நமக்கு அருள் செய்து, பின், அதனை மறந்து நம்மைப் பிரிந்தோரான அவர் நம்மை நினையாராயினும்:

அவர் நாட்டு -

நெருங்கிய இலைகளைக்கொண்ட பலாவின் கனியினைக் கவர்ந்த கையுடையதாக, அறியாத மந்தியானது தன் கடுவனோடு துள்ளித் திரிகின்ற, மிக்க வலியமைந்த தெய்வத்தையுடைய நெடிய பெரிய குன்றத்திடத்து, இனிதாகப் பாடி வீழும் அருவியினை அணிந்துகொண்டதாக, வானளாவிய உச்சிமலை காணப்பெறுதலினாலே -

யானும் உயிர் வாழ்ந்திருக்கின்றேன் என்பதனை அறிவாயாக.