பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

அகநானூறு -நித்திலக் கோவை


செல்வம் பொதுமையின்றி நனவின் இயன்றதாயினும் கங்குல் கனவின் அற்று' என, மிகவும் நயமாகக் கூறியதனை அறிக. இதனாற் பொருட்செல்வத்தினுங் காட்டில் காதற் பேற்றையே பெரிதாகக் கருதும் காதலரின் பண்பும் புலனாகும்.

இடைவழியில், தலைவியின் நினைவு வந்தடைந்த காலத்து, ‘ஒரு திறம் நினைத்தல் செல்லாய், உரம்கெட மெலிந்தே, நிரம்பா நீளிடைத் தூங்கி இரங்குவை அல்லையோ' என நெஞ்சம் உடைகின்ற தன்மையைச் சுவையுறக் கூறியதனைக் கண்டு இன்புறுக.

பாலைக் கலியினைப் பாடிய இந்த ஆசிரியர், அதன் கண்ணும், இங்ஙனம் காதலையுடையார்க்குப் பொருட் செல்வத்தினும் கூடியிருக்கும் இன்பப்பேறே சிறப்புடைத்தெனக் கூறும் பகுதிகள் பலவாகும். அவற்றையும் கற்று இன்புறுக.

ஆசிரியர், தாம் அரசராதலின், அதற்கேற்பப் பரிதியஞ் செல்வம் பொதுமை இன்றி நனவில் இயன்றதாயினும் எனக் கூறிய உவமைச் சிறப்பினையும் உணர்ந்து மகிழ்க.

380. நீயே கூறுக!

பாடியவர்: மதுரை மருதனிளநாகனார். திணை: நெய்தல். துறை: பின்னின்ற தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி, தலைமகட்குக் குறைநயப்பக் கூறியது.

(தலைவியிடம் தலைமகனுக்கு அருள் செய்யுமாறு கூறி, அவனுக்காகப் பரிந்து வேண்டுகின்றாள் அவளுடைய தோழி, இந்த முறையில் அமைந்த செய்யுள் இது)

தேர்சேண் நீக்கித் தமியன் வந்து,நும்
ஊர்யாது? என்ன நனிநணி ஒதுங்கி
முன்னாள் போகிய துறைவன் நெருநை
அகலிலை நாவல் உண்துறை உதிர்த்த
கனிகவின் சிதைய வாங்கிக் கொண்டுதன் 5

தாழை வேர்அளை வீழ்துணைக்கு இடூஉம்
அலவற் காட்டி, 'நற்பாற்று இது' என
நினைந்த நெஞ்சமொடு நெடிதுபெயர்ந் தோனே
உதுக்காண் தோன்றும் தேரே இன்றும்
நாம்எதிர் கொள்ள மாயின் தான்.அது 10

துணிகுவன் போலாம் நாணுமிக உடையன்
வெண்மணல் நெடுங்கோட்டு மறைகோ?
அம்ம, தோழி! - கூறுமதி நீயே!