பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 187



தோழி! தன் தேரினைத் தொலைவிலேயே நிறுத்திவிட்டுத் தனியனாகவந்து, 'நும் ஊர் யாது?’ என்று நாம் கேட்பக், குறுகக் குறுக நடந்து முன்னாளிற் சென்றனன் துறைவன்.

நேற்று, அகன்ற இலைகளையுடைய நாவன் மரமானது நீருண்ணும் துறைக்கண்ணே உதிர்த்த கனியினை, அதன் அழகு கெடுமாறு இழுத்துக்கொண்டு சென்று, தாழையின் வேர்ப்பக்கத்துள்ள அளையிலேயிருக்கும் தான் விரும்பிய தன் துணைக்கு இடுகின்ற நண்டினைக் காட்டி, 'இது நல்ல பான்மையினை உடையது' என்று கூறி, நின்னை நினைந்த நெஞ்சத்தோடு நெடிது பெயர்ந்தும் சென்றனன்.

இன்றும், அதோ பார், அவனுடைய தேர் தோன்றுகின்றது. நாம் அவனை எதிர்கொண்டு ஏற்காமலிருந்தால், நாணம் மிகவும் உடையவனாதலின், அதனை ஒதுக்கித் தானே அதனைச் சொல்லத் துணிகின்றவன் போலும் உள்ளனன்!

அதனால், வெண்மையான மணலையுடைய நெடிய மணல் மேட்டிற் சென்று மறைந்து கொள்வோமோ? என் செய்வா மெனக் கூறுவாயாக!

சொற்பொருள்: 2. நனி நண ஒதுங்கி-குறுகக் குறுக நடந்தவனாகச் சென்று. 4. உண்டுறை-நீர் உண்ணும் துறை. 7. நற்பாற்றிது-இது நல்ல பான்மையினையுடையது.

விளக்கம்: "நாவற் கனியை நண்டு தன் துணைக்கு ஊட்டக் காட்டி, 'நற்பாற்று' என்றவனாக நினைந்த நெஞ்சமொடு” என்றது. தானும் அவ்வாறே தலைவியை மணந்து அவளுடன் கூடி இனிதாக இல்லறம் நிகழ்த்த விரும்பியவன் அவன் என்றதாம்.

'அது துணிகுவன்’ என்றது மடலேறுதல் போன்ற முயற்சிகளிலே ஈடுபடுவான்போலும் என்றதாம்.

'வெண்மணல் நெடுங்கோட்டு மறைகோ?' என்றது, 'அவனுடன் அவ்விடத்துக்கூடி மகிழ்வாயோ?' எனக் குறிப்பால் உணர்த்தியதாம்.

381. பாழ்கொண்ட மேனியள்!

பாடியவர்: மதுரை இளங்கெளசிகனார். திணை: பாலை. துறை: தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. சிறப்பு: சேரனின் பேராற்றல்.

(தன் அன்புடைய மனைவியைப் பிரிந்து, பொருளார்வம் மிகுதியாக எழுதலால், வேற்று நாடு நோக்கி வழிக்கொண்டான்