பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

அகநானூறு - நித்திலக் கோவை


ஒரு தலைவன். இடைச்சுரத்தே சென்று கொண்டிருக்கும் அவனுடைய உள்ளத்திலே, தலைவியின் நினைவு எழுகிறது. அவன், தன் நெஞ்சிற்கு அப்போது சொல்லிக் கொள்ளுகின்ற முறையிலே அமைந்தது இச்செய்யுள்)

ஆளி நன்மான் அணங்குடை ஒருத்தல்
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப
ஏந்தல் வெண்கோடு வாங்கிக் குருகருந்தும்
அஞ்சுவரத் தகுந ஆங்கண் மஞ்சுதப
அழல்கான்று திரிதரும் அலங்குகதிர் மண்டிலம் 5

நிழல்சூன்று உண்ட நிரம்பா நீளிடை
கற்றுரிக் குடம்பைக் கதநாய் வடுகர்
விற்சினம் தணிந்த வெருவரு கவலை
குருதி ஆடிய புலவுநாறு இருஞ்சிறை
எருவைச் சேவல் ஈண்டுகிளைத் தொழுதி 10

பச்சூன் கொள்ளை சாற்றிப் பறைநிவந்து
செக்கர் வானின் விசும்பணி கொள்ளும்
அருஞ்சுரம் நீந்திய நம்மினும் பொருந்தார்
முனைஅரண் கடந்த வினைவல் தானைத்
தேனிமிர் நறுந்தார் வானவன் உடற்றிய 15

ஒன்னாத் தெவ்வர் மன்னெயில் போலப்
பெரும்பாழ் கொண்ட மேனியள் நெடிதுயிர்த்து
வருந்தும்கொல்? அளியள் தானே! - சுரும்புண
நெடுநீர் பயந்த நிரைஇதழ்க் குவளை
எதிர்மலர் இணைப்போது அன்னதன் 20
அரிமதர் மழைக்கண் தெண்பனி கொளவே!

நெஞ்சமே ஆளியாகிய நல்ல விளங்கினது வருத்துதலை யுடைய ஏறானது, வலிமையுடைய வேழத்தின் தலைவனானது வருந்துமாறு அதன் நிமிர்ந்த வெண்மையான கொம்பினைப் பறித்து, அதன் குருத்தினைத் தின்னும், அச்சமுண்டாகத் தகுந்த அச் சுரநெறியினிடத்தே, மேகமும் பெய்யா தொழிந்ததாக, எரியினைக் கக்கிச் செல்லும் அசையும் கதிர்களையுடைய ஞாயிறானது, நிழலினை அகழ்ந்து உண்ட, செல்லத் தொலையாத நெடிய இடைவழியே, கன்றின் தோலினாலாகிய கூட்டினையும், சினம் பொருந்திய நாய்களையும் உடைய வடுகர் இருப்பர். அவர்களுடைய வில்லின் சினமும் தணிந்த, அச்சம் வருகின்ற கவர்த்த நெறிகளிலே, குருதியிற் படிந்தபுலால் நாற்றத்தை உடைய பெரிய சிறகினையுடைய எருவைச் சேவலினது கூடிய கிளைகளின் கூட்டமானது, பசுமையான