பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

அகநானூறு - நித்திலக் கோவை



தற்புரந்து எடுத்த எற்றுறந்து உள்ளான்
ஊருஞ் சேரியும் ஓராங்கு அலர்எழக்
காடுங் கானமும் அவனோடு துணிந்து
நாடுந் தேயமும் நனிபல இறந்த
சிறுவன் கண்ணிக்கு ஏர்தே றுவரென 5

வாடினை-வாழியோ, வயலை!-நாள்தொறும்
பல்கிளைக் கொடிகொம்பு அலமர மலர்ந்த
அல்குல் தலைக்கூட்டு அம்குழை உதவிய
வினையமை வரணி விழுத்தொடி தத்தக்
கமஞ்சூற் பெருநிறை தயங்க முகந்துகொண்டு 10

ஆயமடக் கண்ணன் தாய்முகம் நோக்கிப்
பெய்சிலம்பு ஒலிப்பப் பெயர்வனள் வைகலும்
ஆரநீர் ஊட்டிப் புரப்போர்
யார்மற்றுப் பெறுகுவை அளியை நீயே!

வயலைக் கொடியே! நீ வாழ்க! தன்னைப் பெற்று.வளர்த்த என்னையும் பிரிந்து நினையாளாயினள். ஊரிடத்தும் சேரியிடத்தும் ஒரு பெற்றியே அலரும் எழுந்தது.காடும் கானமும் அவனுடன் கடந்து செல்லவும் துணிந்தனள். நாடும் தேயமும் மிகப்பல கடந்தும் செல்வாள் ஆயினள். அத்தகைய சிறிய வன்கண்மையினை உடையவட்கு அழகு செய்விக்க நின்னைக் கொய்வர் எனக் கருதி நீ வாடியுள்ளாயோ?

நாள்தோறும், பல கிளையாய கொடியாகிய கொம்புகள் பாரம் தாங்காது அலமர, மலர்கள் நிறைந்த அழகிய குழையினை அவளுடைய அல்குலிடத்தே அமையும் தழையுடைக்காக உதவினாய். அந்த அழகிய மடப்பம் தோன்றும் கண்களை உடையவள், சிறந்த வளையல்கள் அசையவும், அரிபெய்த காற்சிலம்புகள் ஒலிக்கவும் தொழிற்பட்ட மூங்கிற்குழாயின் வழியாக வரும் நீரினை, நிறைந்த நீரினைக் கொள்ளும் பெரிய சாலிலே அசையுமாறு முகந்துகொண்டு வந்து. தாயாகிய என் முகத்தினை நோக்கியவாறே, நாடோறும் நினக்கு நீரூற்றப் பெயர்வாள் அன்றோ! (அவள், இப்போது சென்று விட்டனள். இனி, அவளைப்போல) நிறைய நினக்கு நீருட்டி நின்னைப் பேணுபவராக யாரினைப் பெறுகுவை? நீ இரங்கத்தக்காய்!

சொற்பொருள்: 2. ஓராங்கு - ஒரு பெற்றியே, ஒரு தன்மைத்தாக, 3. அவனொடு துணிந்து அவனோடு செல்லத் துணிந்து. 5. சிறு வன்கண்ணி - இளையளாய, வன்கண்மை உடையவள். 7. அலமரல் - சுழலுதல், 9. வினை அமை வரல் நீர் - வினையமைந்த மூங்கிற் குழாய் வழியாக வந்து சொரியும் நீர். 10. கமஞ்சூல் - நிறைசூழ்; நிறைசூலுற்றவரது வயிறு போன்ற பெரிய