பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 201


கழுத்தினையும், கூர்மையான முள்ளினைப் போன்ற சிவந்த கால்களையும் உடைய தன் சேவலை அழைத்துக் கூப்பிடும், அத்தகைய சுரநெறியிடத்தே-

வில்வீரர் நெருங்கிய அரிய போரிலே, அவர் படையணி அழியும்படியாக அவரைக்கொன்று நல்ல புகழினை நிலைபெறுத்தியவர், நாணத்தினை உடையவரான மறவர்கள் அவர்களது, வரிசையாக நிற்றலையுடைய நடுகற்களிலே பொருந்தியிருந்து, கண்ணிமையாது இரையினை விரும்பிக் கிடந்த முதுமைவாய்ந்த பல்லியானது, சிறிதளவு ஒலித்துத் தடை செய்யுமாயினும், பெரிதான நெற்றிப் பட்டத்தை அணிந்த யானை மேற் செல்லும் உயர்வினையுடைய அரசர்களேயானாலும் அவ்விடத்தினின்றும் மேற்செல்லாது திரும்பிவிடும் கொடுமையுடைய கானத்தின்கண், எம் தலைவர் சென்றுள்ளனர் என்று கூறி, ஆற்றியிருக்கும் வன்மையுடையவர்க்கு, மீண்டு வருதலைப் பற்றிய செய்தியினை உரைப்பீராக! (அன்றி யாம் அஃதாற்றேம் ஆதலின், எமக்கு உரைத்தல் வேண்டா என்பது கருத்து)

சொற்பொருள்: 2, கலுழல் - கலங்குதல். 4. உவர் - உவர் மண்; ‘புகருண’ எனவும் பாடம். ஊன்தலை - புண்ணினாலே ஊன் பொருந்தியிருக்கும் தலை 5 வரி ஆடையின் கறையும் ஆம்; அதனைக் கொன்ற என்றது, அதனை மாற்றிட்டுப் போக்கியது ஆம்; அதனால், வள்ளுகிர் கறைப்பட்டது என்க. 7. பூந்துகில் - அழகிய ஆடை, பூவனைய மெல்லிய துகிலும் ஆம். பொலன் காழ் - பொன்வடம், 8. அல்குல் அவ்வரி - அல்குலிடத்தான அழகிய இரேகைகள். திதலைப் புள்ளிகளும் ஆம். 9. அரில் - பிணைந்து கிடக்கும் தூறுகளையுடைய காடு, வேட்டு விளி - வேட்டுவர் பறவைகளைப் பிடிக்கக் கருதிச் செய்யும் கூப்பீட்டு ஒலி. 10. இதல் - காடை 14 நாணுடை மறவர் - மானம் உடைய மறவர்; களத்தில் வீழ்வதேயன்றிப் புறமுதுகிட்டு ஓடாத மற மானத்தைக் குறித்தது. 17. தெற்றுதல் - தடைப்படுத்தல் 18. ஒடை - நெற்றிப்பட்டம்.

விளக்கம்: தலைவியும் தோழியும் கலந்த நட்பினர் ஆதலின், இவ்வாறு தோழி கூறினாள் என்க. 'அல்குல் அவ்வரி சிதைய நோக்கிக் காணஞ் சென்றோர்மன்’ என்ன இருக்கிற்போர்க்கு, வருவீர் ஆகுதல் உரைமின்' என்றதனால் தாம் பிரிவினை ஆற்றியிருக்க மாட்டாது, ஆவி சோர்தலுறுதலையும் புலப்படுத்தினள்.

'வேட்டு விழிகேட்ட இதலின் பேடை தன் சேவலைப் பயிரும்' என்றது, தன் சேவல் வேட்டுவன் கையிற் சிக்கிவிடக்-