பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

அகநானூறு - நித்திலக் கோவை



வலியமைந்த வேலினையுடைய வானவரம்பனது நல்ல நாட்டிற்கும் அப்பாலுள்ள, வேனில் நீடிய வெங்காட்டினை அடைந்த விடத்தே, வழிச் செல்வோராகிய புதியவர் வேறாகப் பிரிந்துபோய் அலறுமாறு, கொலைத்தன்மையாகிய வெம்மையினாலே தன் நிலைபெயர்ந்து தனித்துத் தங்கிய பெருங் களிற்றைக் கொன்ற, பெரிய நிறம் பொருந்திய ஆண் புலியானது, குருதியினாற் சிவப்புற்ற நிலத்திடத்தே தன் கால்களை வளைத்துத் தாவிக் களிற்றை வலத்தே வீழுமாறு வீழ்த்திய தன் வெற்றிச்செருக்கோடு, வெற்பிடமெல்லாம் எதிரொலி செய்ய மழைமேகத்தின் இடி முழக்கத்தைப் போல முழக்கஞ் செய்யும், நெடிய மரங்களையுடைய மலைவழிகளைக் கடந்தும் சென்றனரே! (ஆதலின் யான் வருந்தாது ஆற்றியிருத்தல் கூடுமோ? என்பது குறிப்பு)

சொற்பொருள்: 1. நெறிகுரல் - நெறித்தல் கொண்ட கொத்தான கூந்தல், 2. உளறல் ஆற்றுதல்.3 தேம்கமழ் - இனிதாக மணம் கமழும். 4. எதிர் மலர் - வெவ்வேறு நிறத்தவாய மலர். 5. அல்லி - பூந்தாது.7. பஞ்சி செம்பஞ்சிக் குழம்பு. 8. புறந்தருதல் - பேணிக்காத்தல். 10. துனைதந்து - விரைந்து. 12. புதுவ புதுவதான பொருள்கள். 13. கறுத்தோர் - பகை கொண்டோர். 14. செல்லல் - துன்பம். 17, வெம் கடம் - வெம்மைமிக்க காடு. 19. நிலை பெயர்தல் - தன்னுடைய கூட்டத்தை அகன்று திரிதல். 21. செம்புலம் - சிவந்த புலம்; புலம் சிவந்தது களிற்றின் குருதி படிதலால் - என்க. 22. சிலம்பகம் - மலையிடம். சிலம்ப - எதிரொலிக்க 23. படுமழை - மழை பெய்தலைப் பொருந்திய மேகம்.

விளக்கம்: "அறியாய் தோழி” என்றது, தலைவன் பாராட்டிய காதலன்புக்க நிகழ்ச்சிகளை; அவை, சாந்தார் கூந்தல் உளருதல் முதலாகப் பகலும் நீங்கார் பல்பூஞ்சேக்கையில் என்பது வரையும் ஆம். அத்தகைய அன்பு பாராட்டிய ஒருவரைப்பிரிந்திருப்பது எங்ஙனம்? பிரியின் அதனை நினைந்து வருந்தாதிருப்பது எங்ஙனம்? தலைவியின் இந்த நிலையினைத் தோழி உணர்வதுபோலவே நாமும் உணர்கின்றோம்.

'நிற் பாராட்டி' என்றது தோழியைத் தலைவன், தங்கள் உறவுக்குத் துணைநின்ற தகைமை குறித்துப் பாராட்டியதனைச் சொல்லியதாம்.

“இரப்போர்க்குக் கைநிறையப் புதுவ தந்து உவக்கும் வண்ணம் பொருள் தேடிவரப் போயினன் தலைவன்” எனவே அவன் தலைவியுடன் வாழ்கின்ற இல்வாழ்விற்கு உரிய வசதிகளை இயல்பாகவே உடையவன் என்பதும் பெற்றனம்.