பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

அகநானூறு - நித்திலக் கோவை


கூட்டத்துடன் சேர்ந்து வாழும் வாழ்க்கை நன்மைதருவது போலும்!

வளைந்த சுருட்டை கொண்ட கூந்தலின் முடி முழுவதும் பெரிதும் புரண்டுகொண்டிருக்க, மெல்லிய அகன்ற அல்குலில் அழகுபெறப் புனைந்த பல தளிருடன் கூடிய தழையுடையானது அவள் அசையுமிடத்துத் தானும் அசைந்தாட நடந்து, “ஊரீரே! நெல்லும் உப்பும் நேருக்கு நேரேயாகும், வாங்கிக் கொள்ளிரோ" என்று சேரிதோறும் கூவி விற்கும் ஒருத்தியைச் கண்டேம். அழகிய வளைந்த உந்தியினையும், மூங்கில் போன்ற தோள்களையும் உடையவளே! நின் மெய்யிடத்தே உளதாகும் உப்பின் விலையினை அறிந்திலமே?” என்று கூறி, யாம் சிறிது அவளைத் தடுத்தும் நிறுத்தினேம்.

பெரிய, அரிபடர்ந்த தன் கண்களால் மாறுபட்டனள் போல எம்மை நோக்கி, 'எம்மைத் தடுப்பீர், நீர் யாவிரோ?’ என்று சொல்லி , இளநகையுடையவளாகச் சிறிது பெயர்ந்து நின்றாள் அவள். சிலவாகி நிரைத்த வெண்மையான வளையல்கள் அழகு செய்த, பலவாய மாண்புடைய அப்பேதைமை உடையாளின் பொருட்டு, என் நெஞ்சம் தன் வலிமையினை இழந்துவிட்டதே!

சொற்பொருள்: 1. உவர் - உவர் நிலம் கொள்ளை சாற்றி - விலையைக் கூறி, 2. அதர் - வழி, பூழி - புழுதி 3 ததர்கோல் - செறிந்த கோல். 4 சுரி - சுருள் கொண்ட தன்மை. முச்சி - முடி 7. தொடலை தொடுக்கப்பெற்ற தழையுடை ஒல்குதல் - அசைதல், 8. நேரே நேருக்கு நேராகும்; ஒரு படி நெல்லுக்கு ஒரு படி உப்பு என்றாற்போல.10.அவ்வாங்கு உந்தி-அழகிய வளைந்த உந்தி அமை - மூங்கில் 11. மெய்வாழ் உப்பு - உடலிடத்துப் பொருந்திய இன்பம். எய்யாம் - யாதென அறிந்திலம். 12. விலங்கினம் - குறுக்கே நின்று தடை செய்தோம். 15. மூரல் முறுவலள் - இளநகை உடையவள்.16. நெஞ்சு ஒழிதல் நெஞ்சம் தன் வலிமை கெட்டுத் தளர்தல்.

விளக்கம்: தலைவியிடத்துப் பெறும் இன்பச் செவ்வியினை ‘மெய்வாழ் உப்பு' என்று கூறம் நயத்தினை அறிக, பாங்கற்குத் தலைமகன் சொல்லியதாயின் இவ்வாறும், நெஞ்சிற்குச் சொல்லியதாயின் 'நெஞ்சே பேதைக்கு ஒழிந்தது என்?' எனக் கூட்டியும் பொருள் காண்க

'கணநிரை வாழ்க்கை நன்று கொல்! என்றதனால், அவரோடு சென்றகாலத்துத் தலைவன் தலைவியைச் சந்தித்தலும் நிகழ்ந்தது என்று கொள்ளுக.