பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 209



391. கண்படாஅ வாகும்!

பாடியவர்: காவன் முல்லைப்பூதனார்; காவன் முல்லைப் பூதத்தனார் எனவும் பாடம் திணை: பாலை, துறை: பிரிவிடை வற்புறுத்துந் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

(தலைமகனின் பிரிவுக் காலத்தே, தலைவி வாடி நலிந்தாள். அவளின் வாட்டங்கண்ட தோழி, 'அவன் வருவான்; தேறியிரு' என்று சொல்ல. அவளுக்குத் தலைவி விடை சொல்லுகின்ற முறையிலே அமைந்தது இச் செய்யுள்)

பார்வல் வெருகின் கூர்எயிற்று அன்ன
வரிமென் முகைய நுண்கொடி அதிரல்
மல்ககல் வட்டியர் கொள்விடம் பெறாஅர்
விலைஞர் ஒழித்த தலைவேய் கான்மலர்
தேம்பாய் முல்லையொடு ஞாங்கர்ப் போக்கித் 5

தண்ணறுங் கதுப்பிற் புணர்ந்தோர் - புனைந்தவென்
பொதிமாண் முச்சி காண்தொறும் பண்டைப்
பழவணி உள்ளப் படுமால் - தோழி!
இன்றொடு சில்நாள் வரினுஞ் சென்றுநனி
படாஅ வாகுமெம் கண்ணே கடாஅ 1O

வான்மருப்பு அசைத்தல் செல்லாது யானைதன்
வாய்நிறை கொண்ட வலிதேம்பு தடக்கை
குன்றுபுகு பாம்பின் தோன்றும்
என்றூழ் வைப்பின் சுரனிறந் தோரே!

தோழி! தன் இரையினைப் பார்த்தவாறே இருக்கும் காட்டுப் பூனையின் கூர்மையான பற்களைப் போன்ற, மெல்லிய வரிகளையுடைய அரும்புகளை உடையதாகத் திகழ்வது நுண்மையான காட்டுமல்லிகைக் கொடி. அவ்வரும்புகள் நிறைந்த அகன்ற வட்டியினை உடையவராகிய பூவிற்போர், அவற்றை விற்கும் வேறிடத்தைப் பெறாதவராகக் கொணர்ந்து கொட்டிய, எம் தலையின்கண் சூட்டிய காட்டு மலர்களுடனே, தேனொழுகிக் கொண்டிருக்கும் முல்லை மலர்களையும் அகற்றிவிட்டு, எம் குளிர்ந்த மணமுள்ள கூந்தலிற்கிடந்து துயின்றவர் எம் காதலர்.

மதங்கொண்ட களிறானது, தன்னுடைய வெண்மையான கொம்பினை அசைக்கவும், இயலாததாய்த், தன் வாயிடத்தே நிறையுமாறு கொண்ட வலிகுன்றிய பெரிய துதிக்கையானது, மலைக் குகையினுள்ளே நுழையும் பாம்பினைப் போலத் தோன்றும் வெப்பம் மிகுந்த இடங்களைக் கொண்ட சுரநெறியினைக் கடந்தும் அவர் இப்போது சென்றுள்ளனர்.