பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

அகநானூறு - நித்திலக் கோவை


கோடுயர் பிறங்கற் குன்றுபல நீந்தி
வேறுபுலம் படர்ந்த வினைதரல் உள்ளத்து
ஆறுசெல் வம்பலர் காய்பசி தீரிய
முதைச்சுவற் கலித்த ஈர்இலை நெடுந்தோட்டுக்
கவைக்கதிர் வரகின் கால்தொகு பொங்கழி 5

கவட்டடிப் பொருத பல்சினை உதிர்வை
அகன்கண் பாறைச் செவ்வயின் தெறீஇ
வரியணி பணைத்தோள் வார்செவித் தன்னையர்
பண்ணை வெண்பழத்து அரிசி ஏய்ப்பச்
சுழல்மரம் சொலித்த சுளகுஅலை வெண்காழ் 1O

தொடிமாண் உலக்கை ஊழின் போக்கி
உரல்முகம் காட்டிய சுரைதிறை கொள்ளை
ஆங்கண் இருஞ்சுனை நீரொடு முகவாக்
களிபடு குழிசிக் கல்லடுப்பு ஏற்றி
இணர்ததை கடுக்கை ஈண்டிய தாதிற் 15

குடவர் புழுக்கிப் பொங்கவிழ்ப் புன்கம்
மதர்வை நல்லான் பாலொடு பகுக்கும்
நிரைபல குழிஇய நெடுமொழிப் புல்லி
தேன்துங்கு உயர்வரை நல்நாட்டு உம்பர்
வேங்கடம் இறந்தனர் ஆயினும் ஆண்டவர் 20

நீடலர் - வாழி தோழி! - தோடுகொள்
உருகெழு மஞ்ஞை ஒலிசீர் ஏய்ப்பத்
தகரம் மண்ணிய தண்ணறு முச்சிப்
புகளில் குவளைப் போதொடு தெரிஇதழ்
வேனில் அதிரல் வேய்ந்தநின்
ஏமுறு புணர்ச்சி இன்துயில் மறந்தே. 25

தோழி! வாழ்க!

முடிகள் உயர்ந்த பாறைகளையுடைய குன்றுகள் பலவற்றையும் கடந்து, வேற்று நாட்டினை அடைந்து, பொருள் தேடும் முயற்சியினை உடைய உள்ளத்தவர் நம் தலைவர்.

வழியிடைச் செல்லும் புதியராய வழிப்போக்கரது காயும் பசியினைத் தீர்க்கும் பொருட்டாகப் புதுக் கொல்லையிலே தழைத்த ஈரிய இலையின் நெடிய தோட்டினையுடைய கவர்த்த கதிரினைக் கொண்ட வரகின், தட்டையுடன் தொகுத்த பொலியிலே, மாடுகளின் கவர்த்த குளம்பால் துவைக்கப்பட்டு பல கிளைகளினின்றும் உதிர்ந்த வரகினை அகன்ற இடமான பாறையிடத்தே செவ்வையாகத் தெறித்துக் காயவைப்பர், வரிகள் பொருந்திய பணைத்த தோள்களையும் நீண்ட செவிகளையும்