பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 219



தோழி வாழ்வாயாக!

ஒறுக்கின்ற ஞாயிற்றின் வெப்பமான கதிர்கள் ஈரத்தை முற்றவும் தொலைத்தமையினாலே நீரற்றுப் போய்க் கிடக்கும் அகன்ற இடத்திலேயுள்ள, அழலானது மேய்ந்து உண்டமையி னாலே நிழலொழிந்துபோய்க் காணப்படுகின்ற வழியினிடத்தே, வற்றிய மரக்கொம்பைப் போன்று விளங்கும் கவறு பட்ட கொம்புகளையுடைய அழகிய கலைமானானது. அறல் விளங்கினாற் போலத் தோன்றிய பேய்த்தேரினைக் கண்டு, நீருண்ணலை விரும்பி ஓடிஓடித் தனிமையுற்றுக் கலங்கிய உள்ளத்துடனே மேயும் தன் பெண்மானைக் கூவியழைக்கும். மெலிந்து மிக்க துன்பத்துடனும் கூடியதாக எழுந்த அந்தக் குரலை ஆட்களின் குரலோவென வழிச்செல்வார் ஆராய்வர்.

அத்தகைய இடமாகிய, திருந்திய அடியைக் கொண்ட ஞெமை மரங்களையுடைய பெரும்புனங்கள் விளங்கும் குன்றினிடத்தே, அசையும் தண்டினைக் கொண்ட பெரிய மூங்கில்கள் ஒலித்துக் கொண்டுமிருக்கும். இமையமும் வெம்பிய மலையிடத்தாகிய அக்காட்டினைக் கடந்து சென்றிருப்பவர் தலைவர். அவர் - குளிர்ந்த குளத்திலே தோன்றிய வளமான கால்களையுடைய குவளையினது மாரிக் காலத்து மலர்ந்த கரிய மலரானது, மழைக்கு எதிரேற்று விளங்கினாற் போன்று நீருடையவாய், நிறைவுற்ற பெரிதும் அமர்த்த குளிர்ந்த நம் கண்களினின்றும் நீர் ஒழுகும் துன்பமானது தீரும்படியாக, இப்பொழுதே வருவாராயின் நன்றாகும். (ஆயின், அவர் வந்திலரே யாம் என் செய்வோம்? என்பது கருத்து)

சொற்பொருள்: 1. வண்கால் குவளை-வளவிய தண்டினை யுடைய குவளைமலர். 2. மாமலர் - கருமலர். 4பணிவார் எவ்வம் - கண்ணிர் சொரியும் துயரம்.5'தெறுகதிர்-ஒறுக்கும்கதிர் 6.நைத்த - தொலைத்த, 7.அழல் மேய்ந்து உண்ட நிழல்மாய் இயவு - வெப்பம் பரவித் தின்றலால் இலைகளற்று மரங்களின் நிழலும் ஒழிந்து போயின நெறி. 9.தேர் - பேய்த்தேர்; கானல்நீர். 10.உலமரல் உள்ளம் - கலங்கிய உள்ளம் 11.அழிபடர் குரல் - அழியத் தக்கதாக வந்துற்ற துன்பத்தினிடத்திருந்து எழுகின்ற குரல் 12ஆட்செத்து-ஆட்குரல் என்று கருதி. 15.கடற்ற காடு - மலைப்பகுதியாகிய காடு,

விளக்கம் : 'தெறுகதிர். கோடு காய் காடு’ என்றது, காட்டின் வெம்மை மிகுதியினைக் குறிப்பிட்டதாகும். அவ்வழிச் சென்றோர் எனவே, அவருறும் துயரத்தை உளங்கொண்டு தலைவி வருந்தினள் எனலும் ஆகும். 'இனிவரின் நன்று’ எனவே, வராத நாள்வரை தன் வருத்தம் தீராதென்பதையும் உரைத்தனள்,