பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 221


சொல்லியதுடனும் அமையாது, போரிடத்தே வெற்றியொன்றே பெறுகின்ற திண்மையினை யுடைய மிஞரிலி என்பவனோடு தாக்கிப்பொருது, தன்னுடைய உயிரையும் கொடுத்தான் அந்த ஆய் எயினன். ஆனால் நீயோ?-

தெறுதற்கு அரிய கடவுளின் முன்பாகத் தெளிவித்து, மெல்லிய சந்தினையுடைய என் முன்கையினைப் பற்றிச் சொல்லிய சொற்களைக் கடந்தனை ஆர்வமுடைய நெஞ்சம் மென்மேலும் சிறப்புக்கொள்ள, நின் மார்பினைத் தழுவுதற்கும் தராதவனாயினை எனக்கு ஏதிலனும் ஆயினை! இனி, யான் நின்னை விடுப்பவள் அல்லேன்.

ஆதிமந்தி என்பவள், நீர் சொரிகின்ற கண்ணினளாகப், பலவற்றையும் வெறுத்தவளாகி வாழ்ந்திருக்க, கடும் திறலுடைய அத்தி என்பவனின் ஆடும் அழகினை விரும்பி, நெடும் நீர்ப்பெருக்குடைய காவிரி என்பாள், அவனைக் கொண்டு மறைத்தாற்போல, நின் மனையோள், நின்னை என்னிடமிருந்து கவர்ந்து கொள்ளலையும் அஞ்சா நிற்பேன்.

வெகுண்டு எழுந்து ஆரியவரசர்கள் அலருமாறு சென்று அவர்களைத் தாக்கியழித்துப், பெரும் புகழுடைய தொன்மை யாகி முதிர்ந்த, வடக்கின் கண்ணுள்ள மலையினிடத்தே வளைந்த விற்பொறியினைப் பதித்துக் கொடிய சினம் பொருந்திய ஆரியவேந்தரைப் பிணித்தும் வந்தவன் சேரமன்னன் ஆவான். அவனுக்கு உரித்தான வஞ்சி நகரத்தைப் போன்ற என் அழகினை, என்பால் தந்துவிட்டுச் செல்வாயாக!

சொற்பொருள்: 1தொடுத்தேன்-பற்றினேன்; அன்றிச்சூள் தொடுத்தேன். எனினும் ஆம், 2.புன்னாடு-புள்ளு நாடு எனவும் பாடம்; மேலைக்கடற்கரை சார்ந்த ஒருநாடு என்பர். 3. பாழி - பாழிப் பேரூர்.5. இகல் அடு கற்பு-பகைவரை வெல்லும் திண்மை; போர் வெல்லும் பயிற்சியுமாம். 7.தெறல் அருங்கடவுள்-தெறு தற்கு அரிய கடவுள், 9. தலைத்தலை சிறப்ப-மென்மேலும் சிறந்து கொண்டே போக. 10.பின்ற ஆதல்-தழுவுதற்கு உரிமையற்ற பிற ஆண்மகன்போல் ஒதுங்கியோன் ஆதல் 13 அத்திஆதிமந்தியின் கணவன் 16, ஆரியர்-ஆரிய மன்னர். 18.பிணித்தோன்-பிணித்துக் கொணர்ந்தோன்; பணித்தோன் எனவும் பாடம்.

விளக்கம் : மிஞிலியோடு பொருது ஆய்எயினன் தன் உயிர் தந்த ஆண்மை, அவன் 'அஞ்சேல்' என்று சொன்ன வாய்மொழியினைப் பேணுதற் பொருட்டாக என்று கொள்ளுக. 'சொல்லைப் பேணுதற்குத் தன் உயிரையும் இழந்த அவன் போலாது, சொல்லிய சூழினை மறந்து என்னைக் கைவிடவும் நினைந்தனையே?’ எனத் தலைவனைக் கேட்கின்றாள் அவள்.