பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

அகநானூறு - நித்திலக் கோவை


உடையானுக்கு யாதொன்று சொல்லப்படுமோ? சொல்வாயாக எனக் கூறி, நின்னுடன் யான் வெறுத்துக் கொள்ளுதலை நீயும் அஞ்சினாயோ?

அவர் மலையிடத்துள்ள மலர்கள் பலவற்றாலும் நின்னைப் போர்த்து மூடிக்கொண்டனையாய், நானுற்று மிகவும் ஒடுங்கினையாய், நின்னை மறைத்துக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கும் நின்னைக் கொணர்ந்து போக்கி, ஏதிலாளராகிய அவர், நீதியின்றிக்கைவிடுவதற்கு வன்மையுடையவர் ஆயினர். அதனை நீ நோக்குதல் செய்யாதி!

நெருப்பையொத்த பூக்கள் நிரம்பிய கிளைகளையுடைய வேங்கையின் நிழலில், நின் செலவினைத் தவிர்ந்து தங்கி, மழை புரத்தலால் பெருக்கமுற்று, ஆரியர்களது பொன் பொருந்திய நீண்ட இமய மலையைப் போன்ற எம் தந்தையது பூக்கள் பலவற்றையுமுடைய காட்டிலே தங்கி, இற்றைப்பொழுது இவ்விடத்தே சேர்ந்தனையாகச் சென்றால், நின் சிறப்புக் கெடுவதும் உளதாகுமோ? (ஆகாதே! அதனால் தங்கிச் செல்க என்பது முடிபு)

சொற்பொருள்: 9. நன்று புறமாறி அகறல்-அறத்தைக் கைவிட்டு நீங்குதல் 12. புலத்தல்-வெறுத்தல். 15.நயனறநேர்மையின்றி. வல்லியோர்-வண்கண்மையினை உடையவர். 16.நொதுமலாளர்-ஏதிலாளர். 16 அழல்சினை வேங்கை - அழலனைய மலர்கள் செறிந்த கிளைகளையுடைய வேங்கை. 18.புரந்தர - பேணியுதவ. நந்தி-பெருக்கமுற்று. 21.சிதைகுவதுகெடுவது. 22. குயவரி இரும்போத்து-பெரிதான ஆண்புலி. 25. உயங்கு பிடி வருந்தும் பிடி

விளக்கம் : 'குயவரி இரும்போத்துப் பொருத புண்கூர்ந்து உயங்கு பிடி தழிஇய மதனழி யானை வாங்கமைக் கழையின் நரலும் என அவன் நாட்டைக் கூறியது, தானும் அப்பிடியினைப் போலவே, அவனுக்குத் துன்பத்தின் கண்ணும் துணைநிற்கும் காதலன்பு உடையவள் என்பதாகும்.

‘ஆரியர் பொன்படு நெடுவரை' என்றது, இமயத்தினை. அது புரையும் எந்தை கானம் எனவே, அவளுடைய குடியின் செழுமை உயர்வையுங் குறித்தனள் என்க. "கரைபொரு நீத்தம் உரையெனக்கழறி, நின்னொடு புலத்தல் அஞ்சி, அவர் மலைப் பன்மலர் போர்த்து, நாணுமிக ஒடுங்கி மறைந்தனை கழியும்” என்றது, நும்மோன் செய்த கொடுமைக்கு நீயும் எம் எதிர்ப்பட வருதற்கு நாணினையோ? என்றதாம்.

இதனால், அவன் மீள்வதாகக் குறித்த கார்காலம் வந்ததும், வந்து சேராமையும் உணரப்படுவதாம்.